மயிலாடுதுறையில் மோப்ப நாய்கள் உதவியுடன் சிறுத்தையை தேடும் பணி தீவிரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை அருகே 4 வது நாளாக போக்குகாட்டி வரும் சிறுத்தை மேலும் ஒரு ஆட்டை கடித்து கொன்றதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை மறுத்துள்ள வனத்துறையினர், பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிக்க, மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் கடந்த 2ம் தேதி சிறுத்தை நடமாட்டத்தை அறிந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிறுத்தை பிடிபடாத நிலையில் சிறுத்தை ஆரோக்கியநாதபுரம் கருவேலங்காடு பகுதிக்கு இடம்பெயர்ந்ததாக கூறப்பட்டது.

இதனையடுத்து ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வன காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், தானியங்கி கேமராக்கள், மதுரையிலிருந்து கூண்டுகள் வரவழைக்கப்பட்டு சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் வனத்துறையினரிடம் சிக்காத சிறுத்தை சித்தர்காடு பகுதியில் ஆட்டை கொன்றதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

தற்போது மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் கூட்ஸ் வண்டிகள் நிறுத்தும் இடத்தில் மேலும் ஒரு ஆட்டை சிறுத்தை கடித்து கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதகுறித்து போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து கடந்த 4 நாட்களாக வனத்துறையினரிடம் சிக்காமல் போக்குகாட்டி வரும் சிறுத்தையை பிடிக்க, கோம்பை, ராஜபாளையம், டாபர்மேன், சிப்பிப்பாறை போன்ற உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வகையைச் சேர்ந்த மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு காட்டு பகுதியில் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே நேற்று தேரிழந்தூரில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக சீனிவாசபுரத்தை சேர்ந்த
பைசல் அகமது என்பவர் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.  அதன் அடிப்படையில் தேரிழந்தூர் கிராமத்திற்கு சென்ற வனத்துறையினர் அங்கு சோதனை மேற்கொண்டதில் வாட்ஸ் அப்பில் வெளியிடப்பட்ட வீடியோ போலியானது என கண்டறிந்தனர். இதனையடுத்து தனது தவறை ஒப்புகொண்ட பைசல் அகமது, இந்த விடியோ போலியானது என்றும், இதனை யாரும் பகிர வேண்டாம் என பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.





Night
Day