மதுரை பரப்புரையில் பணப்பட்டுவாடா சு.வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேசன் மீது தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டவர் மீது எதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொகுதி வாக்காளர்களிடம் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு ஈடுபடும் வேட்பாளர்கள் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதை தடுக்க தொகுதி வாரியாக பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பணப்பட்டுவாடா செய்வதை கண்டுகொள்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு உதாரணமாக நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வாகனத்தை கடந்த வாரம் பறக்கும் படை அதிகாரிகள் சரிவர சோதனை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பறக்கும் படை அதிகாரி கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

இந்தநிலையில்தான் மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேசன் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலூரில் கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மூன்றாம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடேசன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது, ம.வெள்ளாளப்பட்டி என்ற கிராமத்தில், அவருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு 100 ரூபாய் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது.

பணப்பட்டுவாடா செய்தது தொடர்பான செய்தி ஜெயா பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து, பறக்கும் படை அதிகாரி கிறிஸ்டோபர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் மீது, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தேர்தல் பறக்கும் படை அதிகாரி கிறிஸ்டோபர் அளித்த புகார் மனுவை, மேலூர் நீதித்துறை நீதிபதி கோகுல கிருஷ்ணனிடம் கொட்டாம்பட்டி போலீசார் சமர்ப்பித்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் மீது தேர்தலில் பணம் கொடுத்ததாக வழக்கு பதிவு செய்ய கொட்டாம்பட்டி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, கொட்டாம்பட்டி போலீசார், வேட்பாளர் சு.வெங்கடேசன் மற்றும் திமுக கூட்டணியினர் மீது தேர்தலில் பணம் கொடுத்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மதுரை போன்று பல தொகுதிகளில் திமுக கூட்டணியினர் பணப்பட்டுவாடா செய்து வருவதாகவும், அவர்கள் மீது தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசியல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Night
Day