எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாடு முழுவதும் நாளை நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்ததில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் நாளை நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. தமிழகத்தில் சிஐடியு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் நாளைய வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில் பொது வேலைநிறுத்ததில் பங்கேற்கும் ஊழியர்கள் மீது சம்பள நிறுத்தம், துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து தலைமை செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், நாளை நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க கூடாது என்றும், மீறி பங்கேற்றால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையுடன், "நோ வொர்க் நோ பே" என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.