பேரூராட்சி தலைவரை வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவரான பாமக-வை சேர்ந்த ம.க. ஸ்டாலினை வெடிகுண்டு வீசி மர்மநபர்கள் கொலை செய்ய முயன்ற சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது.  

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் பேரூராட்சி தலைவரான பாமக-வை சேர்ந்த ம.க. ஸ்டாலின் நேற்று மதியம் பேரூராட்சி அலுவலகத்தில் கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த கும்பல், அலுவலகத்தில் சணல் குண்டுகளை வீசியும் அரிவாளால் தாக்கியும் கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் பேரூராட்சி அலுவலக கண்ணாடி, கதவுகள் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் இருவர் காயமடைந்தனர். வெடிகுண்டு தாக்குதலில் இருந்து ம.க.ஸ்டாலின் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தாக்குதல் நடத்திய கும்பல் பின்னர் அந்த காரில் ஏறி தப்பிச் சென்றது. இது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகியுள்ளது.

ஆடுதுறை பேரூராட்சி தலைவரை கொல்ல முயற்சி செய்த கும்பலை கைது செய்ய வலியுறுத்தி கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் பாமக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வெடிகுண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

இதனிடையே, பாமக பேரூராட்சி தலைவர் ம.க. ஸ்டாலினை கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தைக் கண்டித்து ஆடுதுறை வீரன் சோழன் பாலத்தில் அவருடைய ஆதரவாளர்கள் டயர்களைக் கொளுத்தி சாலையை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆடுதுறை பேரூராட்சி தலைவரான பாமக-வை சேர்ந்த ம.க. ஸ்டாலினை வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சித்த சம்பவத்தை கண்டித்து மயிலாடுதுறையில் பாமக சார்பில் போராட்டம் நடைபெற்றது. கிட்டப்பா அங்காடி எதிரில் சாலை மறியலில் ஈடுபட்ட பாமகவினர், சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் ம.க.ஸ்டாலினுக்கு தமிழக அரசு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Night
Day