நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயகுமார் மர்ம மரணம் - அணைத்து வைக்கப்பட்ட சிசிடிவிக்களால் சந்தேகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் எம்.எல்.ஏ. ரூபி மனோகரனுக்கு பெயர் அடிபட்டுள்ளது. கே.பி.கே. ஜெயக்குமாருக்கும், ரூபி மனோகரனுக்கும் இடையே நடந்த விவகாரம் என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங். இவர் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வந்தார். 

தொழிலதிபரான ஜெயக்குமார் தனசிங், கடந்த வியாழக்கிழமை வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் ஒருபுறம் இருக்க கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி ஜெயக்குமார் தனது கைப்பட திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மரண வாக்குமூலம் என குறிப்பிட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், 'திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வருகிறது என்றும், அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

குறிப்பாக நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் பல காரியங்கள் செய்து தருவதாக கூறி தன்னிடம் 70 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கியதாகவும், ஆனால் எந்த காரியமும் செய்து தரவில்லை என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ஜெயக்குமார். இந்த பணத்தை திருப்பிக் கேட்டால் கொலை செய்துவிடுவேன் என ரூபி மனோகரனே நேரடியாகவும், வேறு ஒருவரை வைத்தும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகை சூழலில் ஜெயகுமார் கரைச்சுத்து புதூரில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே கே.பி.கே. ஜெயக்குமார் உயிரிழப்பிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் விளக்கமளித்துள்ளார். 

தானும் ஜெயக்குமாரும் நெருங்கிய நண்பர்கள் என்றும், ஜெயக்குமாரின் மரணம் தனக்கு தனிப்பட்ட இழப்பு என்றும் தெரிவித்துள்ளார். தன் மீதான புகாரில் உண்மையில்லை என்றும், அபாண்டமாகப் பழி சுமத்தப்பட்டுள்ளது என்றும் ரூபி மனோகரன் விளக்கமளித்துள்ளார்.

இதனிடையே ஜெயக்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இடத்தின் அருகில் இருந்து பிளேடுகள் மற்றும் தீப்பெட்டி உள்ளிட்ட பொருட்களை கைரேகை நிபுணர்கள் பறிமுதல் செய்தனர். 

மேலும் அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அவரது ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றையும் போலீசார் மீட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Night
Day