எழுத்தின் அளவு: அ+ அ- அ
நீலகிரியில் கொட்டித் தீர்த்து வரும் கனமழையின் காரணமாக மண்சரிவு ஏற்பட்டு இரண்டு கடைகள் முற்றிலும் சேதம் அடைந்தன.
நீலகிரி மாவட்டத்திற்கு இன்றும் நாளையும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று முதலே உதகை, கூடலூர், குன்னூர், கோத்தகிரி, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தொரப்பள்ளி அருகே இருவ வயல் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் ஆமைக்குளம் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு இரண்டு கடைகள் முற்றிலும் சேதம் அடைந்தன. இதனால் கடையின் உரிமையாளர்கள் வருத்தமடைந்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலா பகுதியில் 186 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழையுடன் கடும் குளிரும் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.