தேடி வந்த இந்து அமைப்பினர்... ஓடி ஒளிந்த காதல் ஜோடிகள்..!

எழுத்தின் அளவு: அ+ அ-

காதலர் தினத்தையொட்டி, காதல் ஜோடிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பாடை கட்டியும், நாய்க்கும்-நாய்க்கும் திருமணம் செய்து வைத்தும், தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்...

காதலர் தினத்தையொட்டி, காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் ரோஜாப்பூ , வாழ்த்து அட்டைகள், சாக்லெட் மற்றும் விதவிதமான பரிசு பொருட்களை வாங்கி தங்களது அன்புக்குரியவர்களுக்கு பரிசளித்து மகிழ்ந்தனர். மேலும் காதலர்கள் சுற்றுலா தலங்கள், பூங்கா, திரையரங்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றும் பொழுதை கழித்தினர். 

இந்நிலையில்தான் தமிழகத்தில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு இந்து அமைப்பினர் தங்கள் எதிர்ப்பை வழக்கம்போல் வெளிப்படுத்தினர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில், இந்து மக்கள் கட்சியினர் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாடை கட்டி, அதில் இரண்டு இதயம் வடிவிலான மெத்தை துணிகளை போட்டு பாடையை தூக்க முயன்ற போது, அங்கு வந்த போலீசார் பாடையை மற்றும் இதய வடிவிலான இரண்டு துணி மெத்தைகளையும் பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மாவட்ட இந்து முன்னணி அலுவலகத்தில், நாய்க்கும்-நாய்க்கும் திருமணம் செய்து வைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை பூங்காவிற்கு காதலர் தினத்தில் வருகை தந்த காதல் ஜோடிகளுக்கு எதிர்ப்பும் தெரிவிக்கும் வகையில், இந்து முன்னணி அமைப்பினர், பூ மாலைகள் மற்றும் தாலி கயிறுடன், 20க்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர். பூங்காவின் நுழைவு வாயில் பகுதியில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோஷங்கள் எழுப்பினர். பின்னர் பூங்காவில் காதலர்களை வலைவீசி தேடிய அவர்களுக்கு, காதல் ஜோடிகள் சிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் இந்து மக்கள் கட்சி சார்பில், காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தாலி கட்டும் போராட்டம் நடத்த வந்தனர். அவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்ததுடன், கோவிலுக்கு வந்த காதலர்களுக்கு அறிவுரை கூறி, கோவிலுக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி வைத்தனர்.

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மாவட்டம் கும்பனோணம் தாராசுரம் பகுதியில் உள்ள ஐராவதீஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள பூங்காவிற்கு தாலி கயிறு உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களுடன் கோஷங்களை எழுப்பி இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா அமைப்பினர் வருகை தந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்த போலீசார், அங்கு வந்த காதல் ஜோடிகளை எச்சரித்து  அனுப்பினர். 

மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள ராஜாஜி பூங்காவிற்கு வருகை தந்த விசுவ ஹிந்த் பரிஷத் அமைப்பினர், பூங்காவில் இருந்த ஒரு காதல் ஜோடியை கண்டறிந்து விரட்ட முயற்சித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காதல் ஜோடியை பூங்காவில் இருந்து வெளியேற்றி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். முன்னதாக காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விசுவ ஹிந்த் பரிசத் அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையம், வண்ணத்துப்பூச்சி பூங்கா உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா மையங்களில் காதலர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், பூங்காவிற்கு வருகை தரும் அனைவரையும் போலீசார் கடுமையான சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.

Night
Day