எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை ரிப்பன் மாளிகை அருகே 13 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த தூய்மை பணியாளர்களை நள்ளிரவில் குண்டுக்கட்டாக காவல்துறையினர் கைது செய்தனர். கோரிக்கையை நிறைவேற்றாத விளம்பர அரசு, அமைதியான வழியில் போராடி வந்த தூய்மை பணியாளர்களை போலீஸாரை ஏவி கைது செய்துள்ளது.
சென்னை மண்டலம் 5 மற்றும் 6 ஆகிய இரு மண்டலங்களில் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் பணிகளை ராம்கி என்ற தனியார் நிறுவனத்திற்கு கொடுத்ததை கண்டித்து, தூய்மை பணியாளர்கள், கடந்த 1ம் தேதி முதல் போராட்டத்தை மேற்கொண்டனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட வாக்குறுதியையும் நிறைவேற்றாத விளம்பர திமுக அரசை கண்டித்து 13வது நாளாக நேற்று வரை போராட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில், தூய்மை பணியாளர்களின் போராட்ட குழுவுடன் அமைச்சர், மாநகராட்சி மேயர், ஆணையர் பேச்சுவார்த்தை நேற்று நடத்தினர். சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தையில் தூய்மை பணியாளர்களின் கோரிக்கை குறித்தும், அதனை நிறைவேற்றுவது தொடர்பாக அமைச்சர் பேச மறுப்பதாக போராட்டக்குழு தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என போராட்டக் குழுவினர் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் குறித்து தொடரப்பட்ட வழக்கில் ரி்ப்பன் மாளிகை வெளியே போராடும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து, காவல்துறையினர் இரவு வரை காத்திருந்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.
தூய்மை பணியாளர்களை வலுகட்டாயமாகவும், குண்டுகட்டாகவும் போலீஸார் கைது செய்ததால் ரிப்பன் மாளிகை முன்பு பதற்றம் நிலவியது. மேலும் காவலர்களுக்கும் தூய்மை பணியாளர்களுக்கும், இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது பெண் தூய்மை பணியாளர்களை வலுகட்டாயமாக காவலர்கள் கைது செய்தனர்.
போராட்ட களத்தில் போலீஸார் கைது செய்யும் போது பெண்கள் மயங்கி விழுந்தனர். இதையடுத்து உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட தூய்மை பணியாளர்கள் 100 அடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் வேளச்சேரியில் இருந்து கிண்டி செல்லக்கூடிய சாலை துண்டிக்கப்பட்டது.
மற்றொரு பேருந்தில் கைது செய்யப்பட்டு பேருந்தில் அழைத்து செல்லப்பட்ட பெண் தூய்மை பணியாளர் ஒருவர் திடீர் மயக்கம் அடைந்தார். அப்போது வலுக்கட்டாயமாக கைகளை இழுத்து போலீஸார் அராஜகம் செய்ததாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டி வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனிடையே தூய்மை பணியாளர்கள் சைதாப்பேட்டை, அடையாறு, கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட தென் சென்னையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.