எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையில் தூய்மை பணியாளர்கள் 6வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தற்காலி தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்ற வாக்குறுதிகளை அளித்த விளம்பர திமுக அரசு, ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகியும் அதனை நிறைவேற்றவில்லை. மாறாக 10 ஆண்டுகளாக பணியாற்றிவந்த தூய்மை பணியாளர்களை தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் பணியாற்ற நிர்பந்திப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இதனைக் கண்டித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் 6வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குறுதியை நிறைவேற்றாத விளம்பர திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும், பேரிடர் காலங்களில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய தங்களை தமிழக அரசு தூக்கி எறிவதாக தூய்மைப் பணியாளர்கள் குற்றம் சாட்டினர்.
தூய்மைப் பணியாளர்களின் காத்திருப்பு போராட்டத்தால் தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 6வது நாளாக குப்பைகள் அள்ளப்படாமல் அதிகஅளவில் தேங்கிக் கிடப்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர். மேலும் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஆகவே தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை செவி கொடுத்து கேட்டு போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.