தூத்துக்குடி எட்டயபுரத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை

எழுத்தின் அளவு: அ+ அ-

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்ட சந்தைகளில் ஆடு விற்பனை களைகட்டியுள்ளது. ஆடுகள் அதிக அளவில் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகம் முழுவதும் வரும் 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் அதிக அளவில் செம்மறி ஆடுகள், கிடாக்கள், வெள்ளாடுகள், குறும்பாடுகள் விற்பனைக்கு வந்தன. அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய சந்தையில் 25 கிலோ எடையுள்ள கிடா 35 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிறப்பு சந்தையில் 7 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

பக்ரீத் பண்டிகைக்கு சில தினங்களே உள்ள நிலையில் கோவை மாவட்டம் அன்னூர் சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்து ஆடுகளை வாங்க திரண்ட வியாபாரிகள் வெள்ளாடு, செம்மறியாடு உட்பட பல்வேறு வகையான ஆடுகளை வாங்கி சென்றனர். 8 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாகின. இன்று நடைபெற்ற சந்தையில் ஒரு கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெற்றது.

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் வாரச்சந்தையில் ஆடுகளும், மாடுகளும் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் போட்டிப் போட்டுக் கொண்டு கால்நடைகளை வாங்கிச் சென்றனர். கால்நடைகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் வார சந்தையில் 6 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் வடலூர் ஆட்டு சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை களைகட்டியது. ஒரு ஆட்டின் விலை 6 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இன்று மட்டும் 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆறுமுகனேரி ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.  ஸ்ரீவைகுண்டம், ஏரல், உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை  வாங்க வந்திருந்தனர். 10 கிலோ முதல் 12 கிலோ வரை எடையுள்ள வெள்ளாடு 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. கொடி ஆடு, சீமை ஆடு, நாட்டு ஆடு, செம்மறி ஆடு என பல்வேறு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. ஒட்டுமொத்தமாக ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

varient
Night
Day