திருநங்கைகள் கொண்டாடும் கூவாகம் சித்திரை திருவிழா...

எழுத்தின் அளவு: அ+ அ-

புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில், திருநங்கைகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா, எதற்காக கொண்டாடப்படுகிறது, ஏன் கொண்டாடப்படுகிறது, திருநங்கைகளுக்கு எதற்காக சடங்குகள் செய்யப்படுகிறது என்பது குறித்து சற்று விரிவாக காணலாம்...

மகாபாரத குருஷேத்திர யுத்தத்தில் பாண்டவருக்கு வெற்றி கிடைக்க, 'எந்தக் குற்றமும் இல்லாத, சகல லட்சணமும் பொருந்திய ஒரு மனிதனை முதல் பலியாக்க வேண்டும்' என கூறப்பட்டது. இதனால், பாண்டவர்கள் தரப்பில், அதற்குரிய சாமுத்திரிகா லட்சணம் பொறுந்திய அர்ஜுனனின் மகன் அரவானை பலி கொடுக்கலாம் என முடிவு செய்கிறார்கள். அதற்காக அரவானை அணுகி அனுமதி கேட்கும்போது, ஒரு பெண்ணுடன் ஒரு நாள் இல்லற வாழ்வை மேற்கொள்ளவேண்டும் என்ற தனது இறுதி ஆசையை கோரிக்கையாக வைக்கிறார். ஆனால், ஒருநாள் இல்லறம் நடத்திவிட்டு சாகப்போகிறவனுக்கு எப்படிக் கழுத்தை நீட்டுவது என்று எந்தப்பெண்ணும் அதற்குச் சம்மதிக்கவில்லை. இறுதியாக ஸ்ரீகிருஷ்ணரே மோகினி அவதாரம் எடுத்து, அரவானை மணக்கிறார். தனது ஆசைப்படி ஒருநாள் இல்லற வாழ்வுக்குப் பின்னர் பலிக்களம் புகுகிறான் அரவான். கணவனை இழந்த மோகினி விதவைக்கோலம் தரிக்கிறாள். 

ஆணான கிருஷ்ணர், மோகினியாக அவதாரம் எடுத்ததன் அடிப்படையில், கூவாகம் திருவிழாவின் போது, திருநங்கைகள் தங்களை மோகினியாகக் கருதி தாலி கட்டிக்கொள்கின்றனர்.

மறுநாள் அரவான் பலி கொடுக்கப்பட்டதும், தாலி அறுத்து விதவைக்கோலம் பூணுகின்றனர். உலகப் பிரசித்திப்பெற்ற இந்தத் திருவிழா, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகத்தில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும், கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா கடந்த ஒன்பதாம் தேதி கொடியேற்றம் மற்றும் சாகைவார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 15 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் செவ்வாய்க்கிழமை இரவு அரவானை கணவனாக ஏற்றுக் கொண்டு பூசாரி கையால் திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்வும், அதனை தொடர்ந்து புதன்கிழமை காலை 6 மணியளவில் அரவான் சிரசுக்கு திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கீரிமேடு கிராமத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட புஜம், மார்பும், நத்தம் கிராமத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கை, கால்களையும், சிவிலியன்குளம் கிராமத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 21 அடி உயர தேரில் பொருத்தினர்.

தொடர்ந்து அரவான் சிரசு கோயிலை சுற்றி வலம் வந்து தேரில் பொருத்தப்பட்ட நிலையில், மகா  தீபாராதனையுடன் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திருநங்கைகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அப்போது கிராம மக்கள் தங்கள் நிலத்தில் விளைந்த பொருட்களையும், சில்லரைக் காசுகளையும் சுவாமி மீது வீசி வழிபட்டனர். தேர் செல்லும் பாதையில் திருநங்கைகள் சூரத்தேங்காய்களை உடைத்து கற்பூரம் ஏற்றி கும்மியடித்து வழிபட்டனர். 

தேரோட்டம் முடிந்த பின்னர், திருநங்கைகள் அணிந்திருந்த தாலி துறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திருநங்கைகள் நெற்றியில் உள்ள பொட்டை அழித்து வளையல்களை உடைத்து தாலியைத் துறந்தனர். அதன் பின்பு அங்குள்ள கிணறுகளில் குளித்துவிட்டு வெள்ளை புடவை அணிந்த திருநங்கைகள், விதவை கோலத்தில் தங்கள் ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா வரும் வெள்ளிக் கிழமை தர்மர் பட்டாபிஷேகத்துடன் நிறைவு பெற உள்ளது.

Night
Day