தரமற்ற டிலைட் பால்... வாங்க மறுக்கும் வாடிக்கையாளர்கள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆவின் டிலைட் பாலில் தரமில்லை என ஆவின் பால் முகவர்களே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் விரும்பி வாங்கி வரும் ஆவின் பச்சை பாலை, தொடர்ந்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையும் எழுத்துள்ளது. 

ஆவின் நிறுவனம் சார்பில் பால், நெய், வெண்ணை, ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு வகை பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆவின் பாலில் ஆரஞ்சு, பச்சை, ப்ளு போன்ற பல்வேறு நிறங்களில் பால்கள் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றில் பெரும்பாலன பொதுமக்கள் விரும்பி வாங்கும் பாலில் பச்சை நிற பாலும் ஒன்றாகும். இந்த, பச்சை நிற பாலின் வினியோகம் தமிழகம் முழுவதும் படிப்படியாக நிறுத்தப்பட்டு வந்த நிலையில் திருச்சி மண்டலத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், வரும் 15ம் தேதி முதல் திருச்சியிலும் பச்சை நிற பால் விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளது ஆவின் நிர்வாகம்.

பச்சை நிற பாலை நிறுத்தம் செய்துவிட்டு, அதற்கு மாற்றாக ஆவின் டிலைட் பாலை விற்பனை செய்ய ஆவின் முகவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பச்சை நிற பாலைவிட, டிலைட் பாலில் கொழுப்புச் சத்துக்கள் ஒரு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. கொழுப்புச் சத்துக்கள் குறைக்கப்பட்டதால் பாலின் சுவை முற்றிலுமாக மாறுபட்டு உள்ளதாக பொதுமக்கள் புகார் கூறுவதாக முகவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பச்சை நிற பால் பாக்கெட்டுகளை விட, டிலைட் பாலின் விலை 7 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதால், மாதக்கட்டணம் செலுத்தி பச்சை நிற பால் வாங்கி வந்த வாடிக்கையாளர்கள் டிலைட் பாலை வாங்க விரும்பவில்லை என்று ஆவின் பால் முகவர்கள் கூறுகின்றனர். மேலும், தரமற்ற ஆவின் பாலை வாங்குவதற்கு தாங்கள் தனியாரிடமே பாலை வாங்கி கொள்வதாக வாடிக்கையாளர்கள் புலம்புவதாகவும் தெரிவிக்கின்றனர். 

இதுமட்டுமின்றி, ஆவின் பால் முகவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 6 சதவீதமாக இருந்த கமிஷனை 3.5 சதவீதமாக குறைத்துள்ளதால், மாதாந்திர கட்டணத்தை வசூல் செய்ய மாட்டோம் என்று திருச்சி மாவட்ட ஆவின் பால் முகவர்கள் சங்கம் சார்பாக  முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, தரமற்ற டிலைட் பாலை நிறுத்தி விட்டு, பொதுமக்கள் விரும்பி வாங்கும் பச்சை நிற பாலை தொடர்ந்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கவும், முகவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கமிஷனில் மாற்றம் செய்ததை ரத்து செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் ஆவின் பால் முகவர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். 

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி குடித்து வரும் பச்சை நிற ஆவின் பாலை நிறுத்தி, பணம் சம்பாதிக்கும் நோக்கில் தரமற்ற பாலை விற்பனை செய்ய முகவர்களை விளம்பர திமுக அரசு நிர்பந்தம் செய்து வருகிறது. மேலும், தொடந்து ஆவின் பாலின் எடைகள் குறைந்து வருவது குறித்த செய்திகளையும் நாம் பார்த்துதான் வருகிறோம். அறநிலையத்துறை முதல் ஆவின் வரை அனைத்து துறைகளின் மூலம் கல்லா கட்டுவதையே குறியாக வைத்துள்ள விளம்பர அரசின் ஆட்டத்திற்கு எப்போது முடிவுக் காலம் வரும் என பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். 

Night
Day