தமிழகம் முழுவதும் பூத் சிலிப் வழங்கும் பணி மும்முரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மக்களவை தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு பிரசாரம், பூத் சிலிப் வழங்கும் பணி, துணை ராணுவத்தினர் அணிவகுப்பு என தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, 700-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கோலாட்டம் கும்பி பாட்டு பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அரிசி ஆலை உரிமையாளர் சங்கம் சார்பில் நெல்லில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறத்தி மைதானத்தில் விரல் குறியீடு டிரோன் மூலம் காட்சிப்படுத்தபட்டன. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் அங்கன்வாடி பணியாளர்கள் வியாபாரிகளுக்கு தாம்பூல தட்டு சீர்வரிசை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மயிலாடுதுறை நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் பூத் சிலிப் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி துவக்கி வைத்தார், பத்தாம் தேதிக்குள் அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் வழங்கப்படும் எனவும், வீடு வீடாக சென்று வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் இந்த பணிகளை மேற்கொள்வார்கள் எனவும் கூறினார். 

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் செண்டை மேளம் முழங்க நடனம் ஆடி, வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தனர். 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருநங்கைகள் நடனமாடி விழிப்புணர்வு மேற்கொண்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தொடங்கி வைத்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தொடங்கி வைத்து வாக்குப்பெட்டி வைக்கும் அறைகளை பார்வையிட்டார். மேலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கும் அறையில் இருந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைக்கு இடைப்பட்ட பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் . இதனை அடுத்து தருமபுரி மாவட்டம் ராஜாபேட்டை  பகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கி மாவட்டம் முழுவதும் பூத் சிலிப் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். 

நாமக்கல் மாவட்டத்தில் மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வீடுகளுக்கே சென்று பூத்சிலிப் வழங்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் உமா தொடங்கி வைத்தார். வாக்காளர்கள் தங்கள் பகுதிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமிருந்து வாக்காளர் தகவல் சீட்டினை பெற்றுக் கொண்டு தேர்தல் நாளான ஏப்ரல் 19-ம் தேதியன்று தவறாமல் வாக்களிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் உமா தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பொது பார்வையாளர் கங்குராஜ் பங்கட் ஆய்வு மேற்கொண்டார். மேலும் வாக்குச்சாவடி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள வசதிகள் மற்றும் முன் ஏற்பாடு பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்கு வந்த துணை இராணுவத்தினருக்கு, காவல்துறையினர் வரவேற்பு அளித்தனர். மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியிலிருந்து வந்த 112 துணை ராணுவத்தினருக்கு மலர்க்கொத்து கொடுத்தும், குளிர்பானங்கள் அறுசுவை உணவுகள் வழங்கியும் தமிழ்நாடு காவல்துறையினர் நெகிழ வைத்தனர்.

பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் காவல்நிலைய பகுதிகளில் காவல்துறையினர், துணை ராணுவத்தினர் அணிவகுப்பு நடத்தினர். சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த அணிவகுப்பு  ஊர்வலத்தில் துணை ராணுவத்தினர் கேரள காவல்துறையினர் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாவட்ட முழுவதும் வருவாய் துறை அலுவலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்தார். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று "பூத் சிலிப்" வழங்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வி தொடங்கி வைத்தார். தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிக்கு செல்லும் வாக்காளர்கள், 13 வகையான ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராஜா பூத் சிலிப் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் வீடு வீடாக பூத் சிலிப் வழங்க உள்ளனர். பூத் சிலிப் வழங்கும் போது அனைவருக்கும் வழங்க வேண்டும், யாருக்கும் விடுபட கூடாது என தாசில்தார் தெரிவித்தார்.

தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கான பூத் சிலிப் வழங்கும் பணியை, மாவட்ட தேர்தல் அதிகாரி லட்சுமிபதி துவக்கி வைத்தார். வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என அப்போது அவர் அறிவுறுத்தினார். 

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் பதட்டமான வாக்கு சாவடிகளை, தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பொது பார்வையாளர் கங்குராஜ் பக்கெட்  ஆய்வு செய்தார். அப்போது பள்ளிக்கூடமான ஒரு வாக்குச்சாவடியில், எல் கே ஜி வகுப்பு நடைபெற்றது. அங்கு சென்ற தேர்தல் பார்வையாளர் பள்ளி சிறார்களிடம் கரும்பலகையில் ஆங்கிலத்தில் எழுதி கலந்துரையாடினார். 


Night
Day