தனுஷ்கோடி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமேஸ்வரத்தில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று தனுஷ்கோடிக்கு புறப்பட்டுச் சென்றார். பிரதமருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழ்நாட்டில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, 2வது நாளான நேற்று திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடி, அக்னி தீர்த்தக்கடல் மற்றும் 22 தீர்த்த குளங்களில் புனித நீராடினர். பின்னர், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி நேற்றிரவு ராமகிருஷ்ண மடத்தில் தங்கினார். 

இந்நிலையில், தனது பயணத்தின் கடைசி நாளான இன்று காலை 9 மணியளவில், பிரதமர் நரேந்திர மோடி தனுஷ்கோடி புறப்பட்டார். அவருக்கு வழிநெடுகிலும் பாஜகவினரும் பொதுமக்களும் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். 

தொடர்ந்து, தனுஷ்கோடி அருகே உள்ள அரிச்சல்முனைக்கு சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள பாரம்பரியமிக்க தூணிற்கு மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், தொலைநோக்கி மூலம் அரிச்சல்முனையின் அழகை கண்டு ரசித்த பிரதமர், கடற்கரைக்கு சென்று மலர்கள் தூவி வழிபாடு நடத்தினார். மேலும், கடற்கரையோரம் அமர்ந்து தியானத்திலும் பிரதமர் மோடி ஈடுபட்டார். 

இதனையடுத்து, ராமாயணத்தில் விபிஷணருக்கு இலங்கை அரசராக ராமர் பட்டாபிஷேகம் செய்து வைத்த இடம் தனுஷ்கோடி என நம்பப்படுகிறது. அயோத்திக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே உள்ள பந்தத்தை குறிக்கும் வகையில் பிரதமர் மோடி கோதண்ட ராமர் கோயில் வழிபாடு மேற்கொள்கிறார். பின்னர், அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்லும் பிரதமர் மோடி, விமான மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். 

பிரதமரின் ஆன்மீக பயணத்தையொட்டி, ராமேஸ்வரத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


 



Night
Day