தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமனத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டுள்ளதாக தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறை டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, தமிழகத்தின் புதிய பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன், நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் பொறுப்பு டிஜிபி நியமன விவகாரத்தில் விதிமுறை மீறப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனித உரிமைகள் செயல்பாட்டாளர் ஹென்றி திபேன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவான, பிரகாஷ் சிங் வழக்கின் தீர்ப்புகளை மீறி உள்ளதாக சுட்டிக்காட்டினார்.
பிரகாஷ் சிங் வழக்கில், மாநில டிஜிபி நியமனம் முற்றிலும் தகுதி மற்றும் வெளிப்படைத் தன்மை அடிப்படையில் நடைபெற வேண்டும் என்றும், மாநில அரசு பணி அனுபவம், சேவை பதிவு, தலைமைத்துவ திறன் அடிப்படையில் 3 மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பட்டியலை UPSC-க்கு அனுப்ப வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஓய்வுபெறும் தேதி சேர்க்கப்படாமல், அரசால் நியமிக்கப்படும் டிஜிபி-க்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் உறுதி செய்யப்பட வேண்டும், அரசியல் தலையீடு மற்றும் நியமனத்தில் பாரபட்சத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் மாநில அரசுகள் தற்காலிக அல்லது பொறுப்பு டிஜிபி நியமனத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறும் வகையில் பொறுப்பு டிஜிபியை நியமித்துள்ள தமிழக அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் ஹென்றி திபென் வலியுறுத்தி உள்ளார். இந்த மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.