சொந்த கட்சியிலேயே அகதியான மஸ்தான்... என்ன காரணம்!

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரத்தில் அதிகார போதையில் கொடி கட்டி பறந்த அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தொடர்புடையவர்களின் பதவிகளும் வாழைப்பழத்தில் ஏற்றப்படும் ஊசி போல் பறிக்கப்பட்டு வருகின்றன. செஞ்சி மஸ்தான் மீதான காழ்ப்புணர்ச்சி என்ன?, திடீரென அடியோடு ஓரம்கட்ட என்ன காரணம் என்பதை அலசுகிறது இந்த செய்தித்தொகுப்பு.

சில தினங்களுக்கு முன் திமுக தலைமை வெளியிட்ட அறிவிப்பில், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அந்த பதவியில் சேகர் என்பவர் நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் பொன்முடிக்கும், செஞ்சி மஸ்தானுக்கும் இடையே உள்ள மோதல் காரணமாகவே செஞ்சி மஸ்தான் பதவி பறிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் காரணம் அது மட்டுமல்ல என்கின்றனர் உடன்பிறப்புகள்.

விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் வன்னியர் சமூகம் அதிகம் என்பதால் வன்னியர் சமூகத்தை சேர்ந்த சேகரை நியமித்தால் வரும் தேர்தலுக்கு பயன்படும் என்ற நோக்கிலேயே நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுஒரு புறம் இருக்க, அமைச்சர் செஞ்சி மஸ்தானின் சொந்த மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதி இடைதேர்தலுக்கான பணிக்குழுவில் கூட அவரது பெயர் இடம்பெறவில்லை என்பது தான் வருத்தத்தின் உச்சம்.

இதற்கெல்லாம் காரணம் நாடாளுமன்ற தேர்தலில் சரியாக பணியாற்றாததே என்று கூறினாலும், உண்மையில் மஸ்தான் குடும்பத்தினரின் அரசியல் தலையீடு காரணமாகவே, திமுக தலைமை அமைச்சரை ஸ்கெட்ச் போட்டு ஒதுக்கப்படுவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அமைச்சர் மஸ்தானின் மகன் மற்றும் மருமகன் ஆகியோரின் அரசியல் மற்றும் அதிகாரத் தலையீடுகள் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையே கடந்த செப்டம்பர் மாதம், திண்டிவனம் நகராட்சியை சேர்ந்த 13 கவுன்சிலர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை திமுக தலைமைக்கு அனுப்பினர். காரணம், "திண்டிவனம் நகர்மன்றத் தலைவராகப் பதவி வகிக்கும் நிர்மலா செயல்படாத தலைவராக இருப்பதாகவும், நகராட்சியின் கட்டுப்பாடுகள் அனைத்தும் செஞ்சி மஸ்தானின் மைத்துனர் ரிஸ்வானின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, ரிஸ்வான் வகித்து வந்த விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பொறுப்பிலிருந்து அவரும் நீக்கப்பட்டார். அதோடு, விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார் அலி மஸ்தானும் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு மஸ்தானுக்கு அடி மேல் அடி கிடைத்தது. இவர் செஞ்சி பேரூராட்சி தலைவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், அந்த வழக்கில் திண்டிவனம் 20-வது வார்டு திமுக கவுன்சிலரின் கணவர் மரூர் ராஜா குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவருக்கு கேக் ஊட்டுவதை போன்று மஸ்தானின் சகோதரர் காஜா நஜீரின் புகைப்படம் வைரலாக, அவர் வகித்து வந்த பேரூர் கழக செயளாளர் பதவியும் பறிக்கப்பட்டது.

இஸ்லாமியரான அமைச்சர் நாசரின் பதவி ஏற்கனவே பறிக்கப்பட்ட நிலையில், நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப்பின் பதவியும் பறிக்கப்பட்டது. இந்த சூழலில், தேர்தல் நேரத்தில் செஞ்சி மஸ்தானின் பதவியைப் பறித்தால் சிறுபான்மையினரிடையே தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என அமைதி காத்த திமுக தலைமை, நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் சரியாக களப்பணியாற்றவில்லை என கூறி தற்போது அமைச்சர் செஞ்சி மஸ்தானின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் வடக்கில் கடந்த 3 ஆண்டுகளாக கொடி கட்டி பறந்த செஞ்சி மஸ்தானின் அதிகாரத்தை நொடி பொழுதியில் காலி செய்ததற்கு பின்னணியில் அமைச்சர் பொன்முடி இருப்பதையும் திமுகவினர் மறுக்கவில்லை. எது எப்படியோ கட்சிக்குள் இருக்கும் பிரச்சனையை மட்டும் பார்க்காமல், மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே விழுப்புரம் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Night
Day