சிக்கன் பிரியாணியில் காக்கா இறைச்சி! வசமாக சிக்கிய தம்பதி..!!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூரில் நாள் ஒன்றுக்கு 100க்கும் மேற்பட்ட காகங்களை விஷம் வைத்து கொன்ற தம்பதியை வனத்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் காக்கை இறைச்சிகளை பிரியாணி கடைகளுக்கு விற்பனை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னையின் புறநகர் பகுதிகளில் சைவ உணவகங்களை பார்ப்பது என்பது அரிதாகிவிட்டது. ஆம்பூர் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி என விதவிதமான பிரியாணி கடைகளும், சாலையோரங்களில் ஃபிரைடு ரைஸ் கடைகளும் அதிகரித்து காணப்படுகின்றன. சிக்கன், பீஃப் போன்ற அசைவ உணவுகள் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக, அதனை தேடி சென்று சாப்பிடும் ஒரு கூட்டமும் டிரெண்டிங்கில் உள்ளன. 

இதனிடையே, திருவள்ளூரில் நாள் ஒன்றுக்கு 100க்கும் மேற்பட்ட காகங்களை விஷம் வைத்து கொன்ற தம்பதியை வனத்துறையினர் கைது செய்தனர். கடந்த சில நாட்களாக நயப்பாக்கம் காப்புக்காடு அருகே உள்ள திருப்பாக்கம் பகுதியில் ஒரு தம்பதி காகங்களை விஷம் வைத்து கொள்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்திய வனத்துறையினர், ரமேஷ்-பூச்சம்மா தம்பதியை கைது செய்தனர். மேலும், விஷம் வைத்து கொல்லப்பட்ட 30க்கும் மேற்பட்ட காக்கைகளும் மீட்கப்பட்டன. 

காக்கைகளை கொன்ற தம்பதியிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்களும் வெளியாகின. குடும்பத்தின் உணவு தேவைக்காக காக்கைகளை வேட்டையாடியதாகவும், இதனை சென்னையின் புறநகர்களில் உள்ள சில பிரியாணி கடைகளில் குறைந்த விலையில் விற்பனைக்கு கொடுத்ததாகவும் தெரிவித்த தம்பதி, நாள் ஒன்றுக்கு 100க்கும் மேற்பட்ட காகங்களை வேட்டையாடி விற்பனை செய்வதை ஒப்புக் கொண்டனர். 

இந்தியாவில் காகங்களை வேட்டையாடுவது குற்றமல்ல, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் படி உயிர்களை சேதப்படுத்துகிற சிறு விலங்குகள் பூச்சி உயிரினங்கள் வகைப்பட்ட தாகவே காக்கைகளும் கருதப்படுகிறது. 

இதனால் காகங்களை வேட்டையாடியவர்களுக்கு 5000 ரூபாய் அபதாரம் மட்டுமே விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். காக்கைகள் வேட்டையாடப்பட்டு இறைச்சி கடைகளில் விற்கப்படுகிறதா? என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பிரியாணி கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Night
Day