காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அங்கன்வாடியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புதல், நீண்ட காலமாக பணிபுரிந்து வரும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிநிரந்தரம், தேர்தலின் போது திமுக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறத்தி தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், ராமநாதரபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்த 1000க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டத்தில் வலியுறுத்தினர். ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்ட திமுக அரசிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் 500க்கும் மேற்பட்டோர் திமுக அரசை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காலி பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றவில்லை எனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். 

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சத்துணவு அலுவலகம் முன்பு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 2000க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கோடைகால விடுப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தலைவர் பிரேமா, போராட்டத்துக்கு பிறகு தங்களுடைய கோரிக்கைகளை அரசு செவி சாய்க்கவில்லை என்றால், தாங்கள் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து அரசுக்கு எதிரான முடிவுகளை எடுத்து நேரிடும் என தெரிவித்தார். 

Night
Day