எம்.எல்.ஏ.வின் கடையால் போக்குவரத்து நெரிசல் - கண்டுகொள்ளாத காவல்துறை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அடுத்த செங்குன்றம் காவாங்கரை பிரதான சாலையில் உள்ள வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் மீன் விற்பனை அங்காடியால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து இச்செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்...

செங்குன்றம் காவாங்கரை பிரதான சாலையில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மவுலானாவின் மீன் விற்பனை அங்காடியால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலின் காட்சிகள் தான் இவை...

மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புழல் காவாங்கரை பகுதியில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மவுலானா ஜே.எம்.எச். என்ற மீன் அங்காடி நடத்தி வருகிறார். இங்கு, மீன் வாங்க பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விட அசைவ பிரியர்களின் கூட்டம் மீன் வாங்க அதிகரித்து காணப்பட்டது. 

மீன் வாங்க வருவோரின் வாகனங்களை உள் வளாகத்திற்குள் நிறுத்த இடம் இல்லாததால், புழலில் இருந்து செங்குன்றம், மீஞ்சூர் செல்லக்கூடிய முக்கிய சாலைகளின் இருபுறங்களிலும் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சாலைகளின் நடுவே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 

இதுகுறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், வாகனங்களை சாலையில் நிறுத்தாமல் இருக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், காவல்துறையினரும் கண்டும் காணாமல் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். வேளச்சேரி எம்.எல்.ஏ.வின் கடை என்பதால் அதிகாரிகளும், போலீசாரும் அலட்சியமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி வரும் சமூக ஆர்வலர்கள், இப்பிரச்சனைக்கு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். 

Night
Day