எழுத்தின் அளவு: அ+ அ- அ
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. பெரும்பாலான கூட்டத்தில் மக்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டத்திலுள்ள பூதனஅள்ளி, நார்த்தம்பட்டி, லலிகம் ஆகிய மூன்று ஊராட்சிகள் சந்திக்கும் எல்லைப் பகுதியில் கல்குவாரி அமைப்பதற்கு திமுக அரசு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த கல்குவாரி செயல்பட ஆரம்பித்தால் விளைநிலங்கள் பாதிக்கப்படும் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே கல்குவாரி உரிமத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றக் கோரியும், இல்லையெனில் அரை நிர்வாணம் போராட்டம் நடத்துவதாக தி.மு.க கட்சியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன் தலைமையில் மக்கள், கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
மதுரை மாவட்டம் கீழமாத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், கீழ மாத்தூர் ஊராட்சியின் 5 வது வார்டில் உள்ள ஆதிதிராவிடப் பொதுமக்கள் தங்கள் பகுதியில் கழிவுநீர் தேங்கி இருப்பதாகவும், மேலும் 200 குடும்பங்கள் வசிக்கும் ஆதிதிராவிட பொதுமக்களுக்கு இதுவரை கழிப்பறை வசதி கூட கட்டித்தரவில்லை எனக்கூறி, திருப்பரங்குன்றம் யூனியன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயனை முற்றுகையிட்டு சரமாரி கேள்வி கேட்டனர். தொடர்ந்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டாம் ரத்து செய்துவிட்டு கிளம்புங்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கிராம சபை கூட்டம் பாதியிலேயே முடிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் வாலாஜாநகரம் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தண்ணீர் சேமிப்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து பொதுமக்களிடத்தில் எடுத்துரைக்கப்பட்டது.