உரிமைத் தொகையை உரிமையுடன் கேட்ட பெண் உரிய பதிலளிக்காமல் உளறிய முதல்வர்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோட்டில் வாக்கிங் சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை வழிமறித்த சாலையோர பெண் வியாபாரி, தனக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெண் வியாபாரியின் கேள்வி கணைகளை எதிர்கொள்ள முடியாமல் திணறிய முதலமைச்சர், உரிமை தொகை கிடைக்காததற்கு எதாவது காரணம் இருக்கும் என மழுப்பலான பதிலளித்து சமாளித்தார். முதலமைச்சரிடம் துணிச்சலாக மகளிர் உதவி தொகை கேட்ட பெண் வியாபாரி குறித்து சற்று விரிவாக காணலாம்.

ஈரோடு, கரூர், நாமக்கல் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க முதலமைச்சர் ஸ்டாலின் ஈரோட்டில் முகாமிட்டுள்ளார்.

ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தை பகுதியில் ஈரோடு திமுக வேட்பாளருக்கு ஆதரவாக முதலமைச்சர் ஸ்டாலின் வாக்கிங் சென்றபடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

உழவர் சந்தை பகுதியில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தபோது, சாலையோரம் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண் வியாபாரி, முதலமைச்சர் ஸ்டாலினை வழிமறித்து, தனக்கு மகளிர் உரிமை தொகை வரவில்லை என கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனை எதிர்பாராத முதலமைச்சர் ஸ்டாலின், மகளிர் உதவி தொகை கிடைக்கவில்லை என்றால் அதற்கு ஏதாவது காரணம் இருக்கும் என மழுப்பலாக பதிலளித்தார்.

அதற்கு அந்தப் பெண், தனது கணவர் மாநகராட்சி தூய்மை பணியில் இருந்து வருவதாகவும், அரசு ஊழியரின் மனைவி என்றால் உரிமை தொகை பெற முடியாதா? - தனது கணவர் சாப்பிட்டால் எனது வயிறு நிறைந்து விடுமா? என முதலமைச்சரிடம் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.

பெண் வியாபாரியின் கேள்வி கணைகளை எதிர்கொள்ள முடியாமல் முதலமைச்சர் திணறடியதை பார்த்து அதிர்ச்சியடைந்த அமைச்சர் முத்துசாமி உடனடியாக கையை அசைத்து அந்தப் பெண்ணை அமைதி காக்க கூறினார்.  அதனை தொடர்ந்து முதலமைச்சர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

திமுகவினரின் தேர்தல் பரப்புரைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இல்லாத நிலையில், ஈரோட்டில் முதலமைச்சரை மறித்து, மகளிர் உரிமை தொகை குறித்து பெண் வியாபாரி கேள்வி எழுப்பியது தேர்தலில் திமுகவுக்கு எதிரான மக்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. 

Night
Day