இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவையில் தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பி.எம். கிசான்’ திட்டத்தில் 21-வது தவணையாக நாடு முழுவதும் 9 கோடி விவசாயிகளுக்கு தலா 18 ஆயிரம் கோடி ரூபாய் உதவித் தொகையையும் விடுவித்தார். 

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் நடைபெற்ற சத்திய சாய் பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, அங்கிருந்து தனி விமானத்தில் கோவை விமான நிலையத்திற்கு மதியம் வருகை தந்தார். விமான நிலையத்தில் இருந்து தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு நடைபெறும் கோவை கொடிசியா வளாகத்திற்கு சாலைப் பேரணியாக சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழி நெடுகிலும் திரண்டிருந்த ஏராளமானோர் மலர்கள் தூவி பிரதமர் மோடியை ஆரவாரத்துடன் வரவேற்றனர். சாலையின் இருபுறமும், பாரம்பரிய கலைநிகழ்சிகளுடன் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சாலைப் பேரணியை தொடர்ந்து இயற்கை வேளாண் மாநாடு நடைபெறும் கோவை கொடிசியா அரங்கிற்கு வருகை தந்த பிரதமர் மோடி, அங்கு அமைக்கப்பட்டிருந்த இயற்கை வேளாண் கண்காட்சியை துவங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த தமிழ்நாடு, ஆந்திரா, கர்நடாகா, கேரளா உள்ளிட்ட மாநில விவசாயிகளிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி, கண்காட்சி அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த வேளாண் பொருட்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் பிரதமர் மோடியுடன் விவசாயிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இன்று முதல் 3 நாட்கள் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பினர் பிரதமர் மோடியை மாலை அணிவித்து வரவேற்றனர். மேலும் நினைவுப் பரிசாக மாட்டு வண்டியையும் பிரதமருக்கு அவர்கள் வழங்கினர்.

தொடர்ந்து நாட்டுப் பண், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட பின்னர், கொங்கு மண்டல விவசாயிகள் சார்பில் பிரதமர் மோடிக்கு புத்தகம் பரிசளிக்கப்பட்டது. பின்னர் வரவேற்புரை ஆற்றிய தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு வேளாண் பல்கலை கழக முன்னாள் துணை வேந்தருமான கு. ராமசாமி, இந்த மாநாட்டுடன் சேர்த்து, விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவங்கி வைப்பதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அடுத்து பேசிய அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன், வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பின்னர் உரையாற்றிய மத்திய இணை அமைச்சர் எல் முருகன், விவசாயிகளின் உற்ற தோழனாக பிரதமர் மோடி இருந்து வருவதாக கூறினார்.

தொடர்ந்து, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் ‘பி.எம். கிசான்’ திட்டத்தில் 21-வது தவணையாக நாடு முழுவதும் 9 கோடி விவசாயிகளுக்கு தலா 18 ஆயிரம் கோடி ரூபாய் உதவித் தொகையை பிரதமர் மோடி விடுவித்தார்.

Night
Day