ஆவின் பால் பொருள்களின் விலை குறைக்கப்படாதது ஏன் - அன்புமணி

எழுத்தின் அளவு: அ+ அ-

ஜி.எஸ்.டி வரிகள் குறைக்கப்பட்டப்பிறகும் ஆவின் பால் பொருள்களின் விலை குறைக்கப்படாதது ஏன் என கேள்வி எழுப்பி உள்ள பாமக தலைவர் அன்புமணி, திமுக அரசின் சுரண்டலுக்கு அளவே இல்லையா என விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் பால் பொருள்களின் விலைகளை கணிசமாக குறைத்திருக்கும் நிலையில், தமிழக அரசின் ஆவின் நிறுவனம் மட்டும் விலையை குறைக்காமல் பழைய விலையிலேயே விற்பனை செய்து வருவதாக குற்றம்சாட்டி உள்ளார்.

அதிக விலைக்கு பால்பொருள்களை விற்பனை செய்து மக்களைச் சுரண்டும் இந்த செயல் கண்டிக்கத்தக்கது எனக்கூறியுள்ள அன்புமணி, பன்னீர், ஐஸ்கிரீம், நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருள்களுக்கு 5 சதவீதமாக ஜி.எஸ்.டி குறைக்கப்பட்ட போதிலும் ஆவின் நிறுவனம் விலைகளை குறைக்கவில்லை என குற்றம்சாட்டி உள்ளார்.

ஜிஎஸ்டி வரிக்குறைப்பு நடைமுறைக்கு வந்த பிறகும் பழைய விலையிலேயே ஆவின் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதால் அவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டு விட்டதா என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்ட போது அதைக் காரணம் காட்டி பால் பொருள்களின் விலைகளை உயர்த்திய தமிழக அரசு, வரிகள் குறையும் போது விலையைக் குறைப்பது தான் அறம் என தெரிவித்த அன்புமணி, ஆனால், அறத்திற்கும் திமுகவுக்கும் இடைவெளி மிகவும் அதிகம் எனவும், ஏழைகளை சுரண்டி பிழைப்பது மனிதநேயமற்ற செயல் எனவும் விமர்சித்துள்ளார். 

இனியும் தாமதிக்காமல் ஜி.எஸ்.டி வரிக் குறைப்புக்கு ஏற்ற வகையில் ஆவின் பால் பொருள்களின் விலைகளை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

Night
Day