ஆவின் பாலில் புழு - தாய்மார்கள் கதறல்

எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஆவின் பால் பாக்கெட்டுகளில் புழுக்கள் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து விரிவாக காணலாம்.

தமிழ்நாட்டில் அதிக அளவு விற்பனை ஆகும் பால் என்றால் அது ஆவின் பால்தான். பெரு நகரங்கள் முதல் சிறு கிராமங்கள் வரை ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  பல வருடங்களாக மக்களின் நம்பிக்கையை பெற்ற ஆவின் பால் அரசு நிறுவனத்தின் மூலம் வழங்கப்படுவதால்  சுத்தமானதாகவும், சுகாதாரமானதாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையில் பல்லாயிரக்கணக்கானோர் ஆவின் பாலை தினசரி வாங்குகின்றனர். சிறு குழந்தைகள் முதல், முதியவர்கள் வரை ஆவின் பாலை அருந்திவருகின்றனர்.

அந்தவகையில்  கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி ஊராட்சிக்குட்பட்ட  கங்கன் குளம் கிராமத்தை சேர்ந்த  விவசாயி லூர்துசாமி-கவிதா தம்பதியினர் பல ஆண்டுகளாக தங்கள் குடும்பத்திற்கு ஆவின் பாலை உபயோகித்து வருகின்றனர்.

இந்நிலையில்  கவிதா வழக்கம் போல்  ஆவின் பால் பாக்கெட்டை வாங்கிய நிலையில் அதனை  பிரித்து காய்ச்சி உள்ளார். அப்போது அதில் புழு மிதந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து அதை தனது செல் போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

கோவில்பட்டி நகரின் முக்கிய சந்திப்புகளில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் அரசு அலுவலக வளாகங்கள் என 30க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் உள்ள நிலையில் ஏராளமானோர் ஆவின் பாலை வாங்கி அருந்துகின்றனர்.  அதுமட்டுமின்றி மளிகை கடைகளிலும் ஆவின் பால் கிடைப்பதால் அதன் விற்பனையும் அதிகரித்து காணப்படுகிறது.இந்நிலையில்  ஆவின் பால் பாக்கெட்டில் புழுக்கள் இருப்பதாக குற்றச்சாட்டு வெளியாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 15 வருடங்களாக ஆவின் பாலை உபயோகப்படுத்தி வருவதாகவும், தங்கள் குழந்தைகள் மற்றும் தங்கள் வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கும் ஆவின் பாலை காய்ச்சி கொடுப்பதாகவும் தெரிவித்த  கவிதா, கடந்த சில தினங்களாக வாங்கக்கூடிய ஆவின் பால் பாக்கெட்டுகளில் புழுக்கள் தென்படுவதாகவும் அதிர்ச்சி தெரிவித்ததோடு, இது போன்ற புழுக்கள் உள்ள பாலை கொடுப்பதால் குழந்தைகளுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

சுத்தமாக இருக்கும் என நம்பி ஆவின் பால் ஏராளமான குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும்,  ஆனால் இது போன்று பாலில் புழு இருந்தால் அதனை வாங்கி பருகும் நிலை என்னவாகும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

கடந்த 15 வருடங்களாக ஆவின் பாலை உபயோகித்து வரும் நிலையில் இது போன்ற பிரச்சனை இருந்ததில்லை எனவும், ஆனால் தற்போது பாலில் புழு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார். மேலும், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுத்தமான மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மக்கள் நம்பிக்கையுடன் வாங்கக்கூடிய  அரசு நிறுவனத்தின் ஆவின் பாலை தரமாகவும் சுகாதாரமாகவும் வழங்க வேண்டும் எனவும், தரமற்ற ஆவின் பால் விநியோகம் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Night
Day