எழுத்தின் அளவு: அ+ அ- அ
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதனூர் திமுக சேர்மேன் தமிழ் அமுதன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அமைச்சரிடம் கடிதம் வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
அமைச்சர் அன்பரசனிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கிய ஆதனூர் திமுக சேர்மேன் தனது முடிவுக்கு மாவட்ட ஆட்சியரின் அழுத்தமே காரணம் என கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்த குன்றத்தூர் பகுதியில் ஆதனூர் ஊராட்சி இருக்கிறது. இங்கு 15 ஆயித்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். குன்றத்தூர் ஒன்றியம் மற்றும் ஆதனூர் ஊராட்சி உள்பட சென்னையின் புறநகர் பகுதிகளில் பல காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவை ஆகும்.. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் நெருக்கடி கொடுப்பதாக கூறி ஆதனூர் சேர்மேன் தமிழ் அமுதன் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
அதாவது தன் மீது விதவிதமான குற்றச்சாட்டுகளை சுமத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் அதனால் அழுத்ததின் பேரில் ராஜினாமா செய்வதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ஆதனூர் சேர்மேன் தமிழ் அமுதன்.
மேலும் தன் மீதான குற்றச்சாட்டுகளை சுட்டுக்காட்டி, ஏன் உங்களது சேர்மேன் பதவியை பறிக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் கேள்வி எழுப்புவதாகவும், இதனால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிட கூடாது என்ற நோக்கத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியை ராஜினாமா செய்வதாகவும் விளக்கம் அளித்திருக்கிறார் தமிழ் அமுதன்.
சென்னையின் புறநகர் பகுதிகளாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பகுதிகள் உள்ளன. அங்குள்ள பகுதிகள் எல்லாமே அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்களின் கட்டுப்பாட்டில் தான் வரும். சென்னை ஒன்றை தவிர தமிழ்நாட்டின் அத்தனை மாவட்டங்களிலும் அதிகாரங்கள் முழுமையாக மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் தான் வரும்.. மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி தான் எல்லாமே நடைபெறும்.. மாவட்ட ஆட்சி தலைவரே அனைத்து துறையின் அதிகாரப்பூர்வமான தலைவராக இருக்கிறார். அதுமட்டுமின்றி ஊராட்சிகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க மாவட்ட ஆட்சி தலைவர்கள் அடிக்கடி ஆய்வு நடத்துவதும் முறைகேடுகள் குறித்து அந்தந்த சேர்மேனிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுப்பதும் வழக்கமான ஒன்று தான்.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் தன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சுமத்தி வருவதாக கூறி ஆதனூர் சேர்மேன் ராஜினாமா செய்திருப்பது, தொடர்ந்து பலமுறைகேடுகளில் ஈடுபட்டு குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறாரோ என்ற சந்தேகத்தையே எழுப்புகிறது.
அதுமட்டுமின்றி ராஜினாமா கடிதத்தில் தன்னை நேர்மையானவன் என சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ் அமுதன், மாவட்ட ஆட்சியரின் குற்றச்சாட்டுகளுக்கு முறையான விளக்கமளித்து தனது நேர்மையை நிரூபிப்பதற்கு மாறாக ராஜினாமா என்னும் முடிவை எடுத்திருப்பது அவர் முறைகேட்டில் ஈடுபட்டாரோ என்ற சந்தேகத்தை மேலும் ஊர்ஜிதப்படுத்துவதாக உள்ளது.
இதனிடையே சேர்மேன் தமிழ் அமுதன் மீது திமுக கவுன்சிலர்களே மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக பல முறை புகார் அளித்திருப்பதாக கூறப்படும் நிலையில் எங்கே செய்த முறைகேட்டுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டி வருமோ என்ற பயத்தில் எஸ்கேப் மூவாக ஆதனூர் சேர்மேன் தமிழ் அமுதன் முந்திக்கொண்டு ராஜினாமா செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.