ஆடவரின் ஊதியத்தைவிட இல்லத்தரசிகளின் உழைப்பு பெரிது - உச்சநீதிமன்றம் பஞ்ச்!

எழுத்தின் அளவு: அ+ அ-

வேலைக்கு செல்லும் ஆண்களின் வருவாய்க்கு இல்லத்தரசிகளின் உழைப்பு சளைத்தது இல்லை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது... காப்பீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் முத்தாய்ப்பான கருத்து இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இல்லத்தரசி ஒருவர் சாலை விபத்தில் மரணமடைந்த நிலையில், காப்பீட்டு தொகை வழங்கக்கோரி இல்லத்தரசியின் கணவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்...

இந்த வழக்கில் மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் இரண்டரை லட்ச ரூபாய் காப்பீட்டு தொகை வழங்க உத்தரவிட்ட நிலையில், தீர்ப்பை எதிர்த்து இல்லத்தரசியின் கணவர் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்...

இந்த வழக்கில் விபத்தில் மரணமடைந்த பெண் இல்லத்தரசி என்பதால், தினக்கூலி பணியாளரை விட குறைந்த பட்ச ஊதியம் பெறுபவராக தான் கருத முடியும் எனக்கூறி, மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தின் தீர்ப்பை உறுதி செய்தது...

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இல்லத்தரசியின் கணவர் மேல் முறையீடு செய்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யகாந்த், கே.வி.விஸ்வநாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது...

அப்போது வேலைக்கு சென்று வருவாயை ஈட்டும் ஆண்களின் ஊதியத்துக்கு இல்லத்தரசிகள் உழைப்பு சளைத்தது அல்ல என கருத்து தெரிவித்த நீதிபதிகள், இல்லத்தரசிகளின் வருவாய் குறித்த உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தின் அணுகுமுறை ஏற்புடையதல்ல என தெரிவித்தனர்...

குடும்பத்தை கவனித்துக்கொள்ளும் பெண்கள், பெரும் மதிப்பிற்குரியவர்கள் என்ற நீதிபதிகள், அவர்களின் பங்களிப்பை பணத்தால் கணக்கிடுவது கடினம் என கருத்து தெரிவித்தனர்...

உச்சநீதிமன்றத்தின் இந்த கருத்துக்கு இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த இல்லத்தரசிகள், பெரும்பாலான ஆண்கள் மத்தியில் குடும்பத்திற்காக தாங்கள் வெளியில் சென்று வேலை பார்த்து கடும் சிரமப்பட்டு குடும்பத்தை கவனித்து வருவதால் தாங்கள் தான் சிறந்தவர்கள் என்ற எண்ணம் நிலவுவதாக தெரிவித்தனர்...

வேலைக்குச் செல்லும் ஆண்களை காட்டிலும் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் காலை எழுந்தது முதல் இரவு தூங்குவதற்கு முன்னதாக வரை தினசரி 18 மணி நேரத்திற்கு மேலாக வேலை பார்ப்பதாக இல்லத்தரசிகள் கூறியுள்ளனர்...

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, கணவருக்கு தேவையான உணவுகளை தயாரித்துக் கொடுப்பது, குடும்பத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பொருளாதாரத்தை மாற்றியமைப்பது, குடும்பத்தை மேம்படுத்த திட்டமிடுவது என தொடர்ந்து குடும்ப சிந்தனையிலேயே தாங்கள் வாழ்ந்து வருவதாக இல்லத்தரசிகள் பெருமையுடன் குறிப்பிட்டனர்...

எவ்வளவு பணிகள் செய்தாலும் வெளியே சென்று சம்பாதிக்கும் ஆண்கள் மத்தியில் நிலவும் ஒற்றைக் கேள்வி...? நீங்கள் வீட்டில் தானே இருக்கிறீர்கள் உங்களுக்கு என்ன பிரச்சனை வரப்போகிறது என்ற கேள்வியே முன் வைக்கப்பட்டு தங்களின் பங்களிப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது என இல்லத்தரசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த சூழலில், உச்சநீதிமன்றத்தின் கருத்து தங்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் நீதிபதியின் இந்த கருத்துக்கள் வரவேற்கத்தக்கது என்றும் இல்லத்தரசிகள் கருத்து தெரிவித்தனர்.

பெண்கள் வீட்டில் இருந்தாலும் வேலைக்கு சென்றாலும், எங்கும் பெண்களுக்கு உரிய மரியாதைகள் கிடைப்பதில்லை என கூறும் இல்லத்தரசிகள், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்து வரவேற்கத்தக்கது என கூறியதுடன், இதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

குடும்பத்துக்காக உழைக்கும் இல்லத்தரசிகளை சமூகத்தில் மேம்படுத்தும் வகையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்து இருப்பதாக இல்லத்தரசிகள் தெரிவிக்கின்றனர்...

உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்தது போன்று இல்லத்தரசிகளும் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை உணர்ந்து, குடும்பத்திற்காக அயராது உழைக்கும் இல்லத்தரசிகளின் பணிகளை நாம் போற்ற வேண்டும் அவர்களை பாராட்ட வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாகவும், கோரிக்கையாகவும் இருக்கிறது...

Night
Day