அரிஹந்த் கட்டுமான நிறுவனம் அலட்சியம்... ரமணா பட பாணியில் இடிந்து விழுந்த வீடுகள்... 08-02-2024

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பெருங்குடியில் ரமணா பட பாணியில் கட்டுமான நிறுவனத்தின் அலட்சியத்தால் வீடுகள் இடிந்து தரைமட்டமானது.... நள்ளிரவில் நிகழ்ந்த விபரீதத்தால் வீட்டில் தங்கியிருந்தவர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்து உயிர் தப்பிய சம்பவம் பற்றி சற்று விரிவாக காணலாம்...

கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் உருவான ரமணா திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில், உயர் அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கான பணியால் அருகில் இருக்கும் ஹீரோவின் வீடும் அதிர்வு காரணமாக இடிந்து விழுந்து விடும்...

அதைப்போலவே சென்னை பெருங்குடி திருவள்ளுவர் நகரில் நடைபெற்றுள்ளது ஒரு பகீர் சம்பவம்...

அரிஹந்த் என்ற தனியார் கட்டுமான நிறுவனம் ஐந்து அடுக்கு கொண்ட அடுக்குமாடி கட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது...

இதற்காக அங்கிருந்த பழைய கட்டுமானங்கள் அகற்றப்பட்டன. அந்த வகையில் பழைய கான்கிரீட் தூண்களை அகற்றும் பணி நடைபெற்ற போது, அருகில் இருந்த வீடுகள் அதிர்வதாக புகார் எழுப்பப்பட்டது...

வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் விழுவதாக அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள், அரிஹந்த் நிறுவனத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இதை கண்டு கொள்ளாமல் தொடர்ச்சியாக அரிஹந்த் நிறுவனம் தனது பணியை  நடத்தி வந்தது. அருகில் வீடுகள் இருந்த நிலையில், கொஞ்சம் கூட இடைவெளி விடாமல், பெரிய இயந்திரங்கள் மூலம் வீடுகளுக்கு மிகவும் நெருக்கமாக 20 அடிக்கும் மேல் பள்ளம் தோண்டியும், பெரிய இயந்திரங்களை வைத்து கான்கிரீட் தூண்களை உடைக்கும் பணிகளையும் செய்து வந்தது...

இரவிலும் இத்தகைய பணிகள் நடைபெற்று வந்த நிலையில் திங்கள் கிழமை அன்று நள்ளிரவில் தான் அந்த பகீர் நிகழ்வு அரங்கேறியது... நள்ளிரவு 2 மணியளவில் இயற்கை உபாதையை கழிக்க வந்த முனியப்பன் என்பவர், அரிஹந்த் நிறுவனத்தின் பணிகளால் அருகிலுள்ள வீடுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்...

உடனடியாக வீட்டுக்குள் உறங்கி கொண்டிருந்தவர்களை உஷார் படுத்திய முனியப்பன், அனைவரையும் வீட்டை விட்டு வெளியே வரச்செய்தார்...

அனைவரும் வெளியேறிய நிலையில் ஒவ்வொரு வீடாக சிதைந்து விழத்தொடங்கியது. தங்கள் கண் முன்னே வீடு இடிந்து விழுவதை கண்டு வீட்டை பறிகொடுத்தவர்கள் கதறி துடித்தனர்...

ஒட்டுமொத்தமாக ஐந்து வீடுகள் முழுமையாகவும், பத்துக்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் விரிசல்களும் ஏற்பட்டுள்ள நிலையில் அரிஹந்த் நிறுவனம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது...

வீடுகளை இழந்த பொதுமக்கள் தெருவிலேயே வீட்டில் இருந்த பொருள்களை வைத்துக்கொண்டு, அடிப்படை வசதியின்றி அல்லாடி வருகின்றனர்... 

வீடுகள் இடிய காரணமாக இருந்து விட்டு உரிய இழப்பீட்டையும் தராமல் அரிஹந்த் நிறுவனம் ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு தரப்பிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற புகாரும் எழுப்பப்பட்டுள்ளது...

தங்களுக்கு உடனடியாக மாற்று இடத்தில் வசிக்க அரிஹந்த் நிறுவனம் ஏற்பாடு செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள வீடுகளை பறிகொடுத்த மக்கள், அரசு தங்களுக்கு புதிதாக வீடு கட்ட நிதியுதவி செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளனர்...

உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல், மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் கட்டுமான பணிகளில் ஈடுபட்ட அரிஹந்த் நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தி உள்ளனர்...

Night
Day