அனைத்து மத மக்களாலும் போற்றப்படுபவர் புரட்சித்தலைவி அம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

புரட்சித்தலைவி அம்மா சாதி, மத, பேதங்களைக் கடந்து, அனைத்து தரப்பு மக்‍களாலும் மிகவும் மதித்து போற்றப்படுபவர். இந்துக்‍கள், இஸ்லாமியர், கிறிஸ்தவர் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரும் சொந்தம் கொண்டாடிய ஒப்பற்ற தலைவி, புரட்சித்தலைவி அம்மா என்பது நாடறிந்த உண்மை. ஆனால், அம்மா, இந்துத்துவா தலைவர் என, தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை அண்மையில் தெரிவித்ததும், அவரது கருத்தை பாரதிய ஜனதாவின் வேறுசில நிர்வாகிகள் ஆதரித்ததும், மிகப்பெரிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்‍களாலும் நேசிக்‍கப்பட்டவர் புரட்சித்தலைவி அம்மா என்பதை விளக்‍கும் ஒரு செய்தித் தொகுப்பு...

புரட்சித்தலைவி அம்மா, தெய்வ நம்பிக்‍கை கொண்டிருந்தார். ஆனால் ஒருபோதும் அவருக்கு மத நம்பிக்‍கை இருந்ததில்லை. அனைத்து மதத்தினரையும் சமமாக மதிக்‍கும் தன்னிகரற்ற அரசியல் தலைவராக வாழ்நாள் முழுவதும் திகழ்ந்தவர் அம்மா. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து பன்னெடுங்காலம், அஇஅதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்தபோதும், 6 முறை தமிழக முதலமைச்சராக தமிழக மக்‍களுக்‍கு அருந்தொண்டாற்றியபோதும், உலகமே வியக்‍கும் சாதனைகளைச் செய்து சரித்திரம் படைத்த தலைவர்தான் புரட்சித்தலைவி அம்மா. அனைத்து தரப்பு மக்‍களின் நன்மைக்‍காக அம்மா செயல்படுத்திய திட்டங்களும் அம்மாவின் அரசியல் ஆற்றல், செயல்திறன் ஆகியனவும் இதற்கு மிகச்சிறந்த சான்றுகளாக திகழ்கின்றன.

ஒப்பாரும் மிக்‍காரும் இன்றி தனிப்பெரும் அரசியல் தலைவராகத் திகழ்ந்த புரட்சித்தலைவி அம்மாவை எந்தவொரு குறுகிய வட்டத்திற்குள்ளும் கொண்டுவர மேற்கொள்ளப்படும் முயற்சியை மக்‍கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். 

இந்துக்‍கள், இஸ்லாமிய மக்‍கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினருக்‍கும் பாரபட்சமின்றி புரட்சித்தலைவி அம்மா வழங்கிய நலத்திட்டங்கள் எண்ணிலடங்காதவை. 'ஆயிரம் இன்னல்கள் வந்தாலும், இறைவனை காணும் பணியை உறுதியுடன் மேற்கொள்வோம்' என்ற உயரிய நோக்‍கத்தோடு புனித தலங்களுக்‍கு யாத்திரை மேற்கொள்ளும் அனைத்து மத மக்‍களுக்‍கும் புரட்சித்தலைவி அம்மா உதவிக்‍கரம் நீட்டி, நன்மைகள் செய்தது அனைவரும் அறிந்ததே.

சீனாவில் உள்ள மானசரோவர் சென்று பார்க்‍க வேண்டும், நேபாள நாட்டில், சாளக்கிராம் மலையில் உள்ள திவ்ய தேசங்களில் ஒன்றான முக்‍திநாத் சென்று தரிசனம் செய்யவேண்டும் என்ற விருப்பம் கொண்ட இந்துக்‍களின் பயணச் செலவுக்‍கு அரசு மானியம் வழங்குவது, இஸ்லாமிய பெருமக்‍களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்திற்கு அரசு உதவி, கிறிஸ்தவ பெருமக்‍கள், ஜெருசலம் புனித தலத்திற்கு சென்றுவர நிதி உதவி... இப்படி அனைத்து மத மக்‍களின் புனித பயணத்திற்காக நிதி உதவித் திட்டங்களை கொண்டு வந்தவர் புரட்சித்தலைவி அம்மா.

ஈகைத் திருநாளாம் புனித ரமலானை யொட்டி, இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை, இந்திய அரசியல் கட்சிகளிலேயே, முதன்முதலில் சொந்த செலவில் ஏற்பாடு செய்தது அஇஅதிமுக-தான். புரட்சித்தலைவி அம்மா இந்த மகத்தான சாதனையை செய்து, ஆண்டுதோறும் அதனை சிறப்பாக நிறைவேற்றி வந்தார். 

புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்‍க, தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்‍கணக்‍கான பள்ளிவாசல்களுக்‍கு அரிசி வழங்குவது, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவுக்‍கு வழங்கப்பட்டு வந்த நிர்வாக மானியத்தை உயர்த்தியது, தமிழ்நாடு வக்‍ஃபு வாரியத்திற்கு வழங்கப்பட்ட மானியத்தை உயர்த்தியது, ஆதரவற்ற முஸ்லிம் பெண்களுக்‍கு உதவிடும் வகையில், முஸ்லிம் மகளிர் உதவி சங்கங்களுக்‍கு இணை மானியத் தொகையை அதிகரித்தது, நாகூர் தர்கா சந்தனக்‍கூடு திருவிழாவுக்‍கு தேவைப்படும் சந்தனக்‍ கட்டைகளை வழங்குவது, இஸ்லாமிய மார்க்‍க அறிஞர்களான உலமாக்‍களின் ஓய்வூதியத்தை உயர்த்தியது, ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்‍கையை அதிகரித்தது, வக்‍ஃபு வாரிய ஓய்வூதியதாரர்களுக்‍கு பணிக்‍கொடைகள் வழங்க சிறப்பு மானியத் தொகை ஒதுக்‍கீடு, மசூதிகள் மற்றும் தர்காக்‍கள் புனரமைப்புக்‍காக சிறப்பு நிதி ஒதுக்‍கீடு, வக்‍ஃபு நிறுவன மேம்பாட்டு நிதியை உருவாக்‍கியது, பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் சிறுபான்மையினர் வகுப்புகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்‍கு பரிசுத் தொகைகள் வழங்குவது, மேலும் கல்வித்துறையில் சிறுபான்மையினருக்‍கு ஏராளமான உதவித் திட்டங்கள்,  உருது மொழியை முதல் அல்லது 2வது மொழியாக பயின்று, பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவியருக்‍கு பரிசுத் தொகை, தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் மூலம் கடன் திட்டம், சிறுபான்மை மக்‍கள் சுயஉதவிக்‍ குழுக்‍கள் மூலம் சிறுதொழில் தொடங்கி வருமானத்தை பெருக்‍கிக்‍ கொள்ள கடனுதவித் திட்டம்... இவ்வாறு சிறுபான்மை மக்‍கள் நன்மைக்‍காக புரட்சித்தலைவி அம்மா செயல்படுத்திய திட்டங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.  

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ஆண்டுதோறும் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாக்‍களில் புரட்சித்தலைவி அம்மா கலந்துகொண்டதும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியதும், ஏழை எளியோருக்‍கு அன்னதானங்கள் வழங்கியதும், வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும் நிகழ்ச்சிகளாகும்.

சிறுபான்மை மக்‍களின் சமூகம், கல்வி, பொருளாதாரம் சார்ந்த மேம்பாட்டுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி, அனைத்து தரப்பு மக்‍களாலும் போற்றப்பட்டவர், புரட்சித்தலைவி அம்மா. அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்‍களும் மகிழ்ச்சியோடும், பாதுகாப்போடும், உரிமைகளோடும் வாழ்ந்தது புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்‍காலத்தில்தான். அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலர வேண்டும் - புரட்சித்தாய் சின்னம்மா இதனை, தமிழக மக்‍களின் பேராதரவோடு நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Night
Day