"கிங் காங்" போல் ஊருக்குள் வந்த கரடி...! கருங்கரடியை தேடும் வனத்துறை...!

எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்த கரடி ஒன்று மூதாட்டியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிராமத்திற்குள் கரடி புகுந்தது குறித்து விரிவாக காண்போம்...

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ளது கல்லிடைக்குறிச்சி கிராமம். மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிக்கு சற்று தொலைவில் உள்ள இந்த கிராமத்திற்கு அருகே, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. 895 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த வனவிலங்கு சரணாலயத்தில் சிறுத்தை, புலி, யானை, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன.  

இந்த நிலையில் கல்லிடைக்குறிச்சி கிராமத்தில், கரடி ஒன்று புகுந்தது. குடியிருப்பு பகுதியில் புகுந்த கரடி, மிரண்டுபோய் கிராமத்தில் உள்ள தெருக்களில் தறிக்கெட்டு ஓடியது. இதனைக்கண்ட பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

கரடி வருவதை கண்ட ஒருவர் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள சாலையில் படுவேகமாக ஓடி அருகில் இருந்த வீட்டிற்குள் நுழைந்தார். இதனால் அவர் கரடியின் தாக்குதலில் இருந்து  நூலிழையில் உயிர் தப்பினார். இதனையடுத்து இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் சாலையில் ஓடிய கரடியை துரத்திச்சென்றனர். அதனால் வேகமெடுத்த கரடி மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றது.

இதனிடையே, லட்சுமி என்ற மூதாட்டி தனது வீட்டு தோட்டத்தில் இருந்தபோது, மரத்தின் பின்புறம் மறைந்திருந்த கரடி அந்த மூதாட்டியை துரத்தி கடித்து குதறியது. இதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, சிகிச்சைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கிராமத்தில் உள்ள தெருக்களில் கரடி ஓடிய காட்சிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி உள்ளன. இது குறித்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு அளித்த தகவலையடுத்து, விரைந்து வந்த வேட்டை தடுப்பு காவலர்கள் கரடியை தேடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அடர்த்தியாக இருக்கும் பகுதிகளில் கரடி ஒளிந்திருக்கலாம் என்பதால் அங்கு கற்களை வீசியும் சத்தமெழுப்பியும் கரடியை தேடி வருகின்றனர். 

கிராமத்தில் சித்திரைத் திருநாள் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் கரடி புகுந்துள்ளதால் அப்பகுதியினர் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். பொதுவாக உணவு, நீர் தேடி மலையடிவார பகுதிகளில் விலங்குகள் வரும் என்றும் ஆனால் இந்த முறை 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தங்கள்  கிராமத்திற்கு வந்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்.

மழைக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் மேற்கு தொடர்ச்சி மலையில், காடுகள் வேகமாக அழிக்கப்பட்டு வருவதன் எதிரொலியாக, வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி வருவதாகவும்,  எனவே, காடுகளை பாதுகாப்பதோடு, வனப்பகுதிகளில் நீர்நிலைகளை உருவாக்கி, அங்கு வனவிலங்குகள் வாழ்தற்கான சூழல்களை ஏற்படுதுவதன் மூலமே இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க முடியும் என வனஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Night
Day