வெயிலில் வாடிய சிறார்கள்... பிரபுதேவாவை வறுத்தெடுத்த பெற்றோர்...

எழுத்தின் அளவு: அ+ அ-

பிரபல டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா வருகைக்காக நூற்றுக்கணக்கான சிறார்கள் கொளுத்தும் வெயிலில் 3 மணி நேரத்திற்கு மேலாக காக்க வைக்கப்பட்டது பெற்றோர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நீண்ட நேரமாகியும் பிரபுதேவா வராததால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் பெற்றோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ராஜரத்தினம் மைதானம் வெப்பத்தை தாங்க முடியாமல் தகித்தது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் அதிரடி முடிவு மற்றும் பிரபுதேவாவின் ரியாக்ஷன் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

சென்னை எழும்பூர் ராஜ ரத்தினம் மைதானத்தில் நடிகரும், நடன இயக்குநருமான பிரபு தேவாவின் 100 பாடல்களுக்கு 100 நிமிடங்களில் நடனமாட குழந்தைகள், இளைஞர்கள், இளம்பெண்கள் என சுமார் 5 ஆயிரம் நடன கலைஞர்கள் "நம்ம மாஸ்டர்" என்ற பெயரில் நடனமாடி உலக சாதனை நிகழ்வு படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதற்காக சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பெங்களூரு, அமெரிக்கா போன்ற இடங்களில் இருந்தும் தனி நபராகவும், நடன குழுக்களை சேர்ந்தவர்களும் ஒருவருக்கு தலா ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் தொகையை கட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

காலை ஐந்து மணியிலிருந்தே இந்த நிகழ்ச்சிக்காக குழந்தைகள், அவர்களின் பெற்றோர் உள்ளிட்டோர் ராஜரத்தினம் மைதானத்தில் குவிய தொடங்கினர். குழந்தைகள் நடனம் ஆடுவதற்காக நிற்க வைக்கப்பட்ட பகுதி முழுவதும் வெயில் இருந்ததால் பலரும் சோர்வடைய தொடங்கினர். இதற்கிடையே இந்த நிகழ்ச்சியில் பிரபுதேவா கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நேரம் நேரம் செல்ல பிரபுதேவா வருகையும் தாமதமாகி கொண்டே இருந்தது. 7 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குவதாக இருந்த நிலையில், 9 மணி ஆகியும் பிரபு தேவாவும் வரவில்லை, நிகழ்ச்சியும் தொடங்கவில்லை. இப்போ வருவார், அப்போ வருவார் என நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் இழுத்தடிக்க, கடுப்பான பெற்றோர், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

வெயிலின் உக்கிரம் அதிகரிக்க தொடங்கியதும், குழந்தைகள் வெயிலில் வாடுவதை பார்த்த பெற்றோரும் கோபத்தின் உச்சிக்கு சென்று கண்டன குரல்களை எழுப்பினர். 6 மணிக்கு தொடங்க வேண்டிய நிகழ்ச்சி, 9 மணியாகியும் தொடங்க வில்லை என்றும் ஒரு மனிதருக்காக இவ்வளவு நேரம் குழந்தைகளை வெயிலில் காக்க வைப்பதா? என்றும் கொந்தளித்தனர்.

கோபத்தில் பொங்கிய பெற்றோரை சமாதானம் செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், மற்றொரு நடன இயக்குநர் ராபர்ட் தலைமையில் நிகழ்ச்சியை தொடங்கினர். 

நிகழ்ச்சி ஆரம்பித்து குழந்தை, இளைஞர்கள் நடனமாடியது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறமோ சிறப்பு விருந்தினராக பங்கேற்க வேண்டிய பிரபுதேவா நிகழ்ச்சிக்கு கடைசி வரை வரவில்லை. ஐதராபாத்தில் இருந்து பிரபுதேவா புறப்பட தயாரான நிலையில், திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை வர முடியவில்லை என பிரபுதேவா சார்பில் நிகழ்ச்சி மேடையில் அறிவிக்கப்பட்டது.  

நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும்போது வீடியோ காலில் வந்த பிரபுதேவா, மிகவும் வருத்தத்துடன் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு வர இயலவில்லை என்றுk; அதற்காக மிகவும் வருந்துவதாகவும் தெரிவித்துக் கொண்டு மன்னிப்பு கேட்டார். இதுவரை எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் தான் ஒப்புக்கொண்டு வராமல் இருந்ததில்லை இந்த முறை வராமல் போனதற்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார் பிரபுதேவா...

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடன கலைஞர் ராபர்ட், பிரபுதேவா நிகழ்ச்சியில் பங்கேற்காத காரணத்தை விளக்கினார். மேலும் மீண்டும் இதேபோன்று ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் அப்போது மாஸ்டர் பிரபுதேவா நிச்சயம் கலந்து கொள்வார் என்றும் உறுதி அளித்தார். குழந்தைகளை வெயிலில் காக்க வைத்ததற்கு மன்னிப்பு கோரிய அவர், அடுத்து முறை உள் விளையாட்டரங்களில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.

நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்ததோ, இல்லையோ, பிரபுதேவாவை நேரில் காண வேண்டும் என்ற ஆர்வத்துடன் வந்த சிறார்கள் உள்ளிட்ட நடன கலைஞர்கள், பிரபுதேவாவை காண முடியாமல் சுட்டெரிக்கும் வெயிலில் வாடியதுதான் மிச்சம் என்ற புலம்பலோடு வீடு திரும்பினர். 

Night
Day