எழுத்தின் அளவு: அ+ அ- அ
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறிய அதிபர் டிரம்ப் அறிவிப்பின் அறிவிப்புக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் இயற்கையாகவே நட்பு நாடுகள் என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால் இந்தியாவுக்கு 50 சதவீதம் வரிவிதித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அச்சுறுத்தி வருகிறார். அமெரிக்காவின் இந்த வரி அச்சுறுத்தலுக்கு அடிபணியாத இந்தியா, ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது.
உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்கவே இந்தியாவுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்து வருகிறது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்பால் இந்தியா- அமெரிக்கா வர்த்தக உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இருநாடுகளுக்கு இடையேயான வார்த்தக விவகாரம் தொடர்பாக இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ட்ரூத் சோஷியல் செயலில் அதிபர் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். வர்த்தகம் தொடர்பாக தனது நெருங்கிய நண்பர் பிரதமர் மோடியுடன் வரும் வாரங்களில் பேச ஆவலுடன் காத்திருப்பதாகவும் டிரம்ப் பதிவிட்டுள்ளார். முன்னதாக இந்தியா வரி அதிகமாக விதிப்பதாக குற்றஞ்சாட்டியிருந்த அதிபர் ட்ரம்ப், ஜி.எஸ்.டி சீர்திருத்தம் மூலம் வரிகள் குறைக்கப்பட்டுள்ளதால் பேச்சுவார்த்தைக்கு முன் வருவதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.