பீகார் மாநில முதலமைச்சராக நிதிஷ் குமார் இன்று பதவியேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகார் மாநில முதலமைச்சராக நிதிஷ் குமார் இன்று பதவியேற்க உள்ள நிலையில், அவருடன் 22 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். 

நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து, புதிய அரசாங்கம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி மேற்கொண்டது. 

முக்கிய நடவடிக்கையாக, பாட்னாவில் நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளம் புதிய எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கட்சியின் தலைவரான நிதிஷ் குமார், கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாட்னாவில் பாஜக தலைமையகமான அடல் சபஹாரில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவராக சாம்ராட் சவுத்ரியும், துணைத் தலைவராக விஜய் குமார் சின்ஹாவும் தேர்வு செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்றக் குழு தலைவராக நிதிஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இதையடுத்து தமது முதலமைச்சர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்து அதன் கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் இன்று நடைபெறும் பதவியேற்பு விழாவில், 10வது முறையாக நிதிஷ் குமார் முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

விழாவில் 22 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதிஷ் குமாருடன் அவரது கட்சியிலிருந்து 10 எம்.எல்.ஏ-க்களும், பா.ஜ.க-விலிருந்து 9 எம்.எல்.ஏ-க்களும், 3 கூட்டணி கட்சிகளில் இருந்து தலா ஒரு எம்.எல்.ஏ-வும் அமைச்சராக பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

Night
Day