எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமைய அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று எம்பிக்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்கியுள்ளதை முன்னிட்டு, நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்த மிகச் சிறந்த நாளில், முக்கிய கூட்டத் தொடர் துவங்கவுள்ளதாக அவர் கூறினார். ஒட்டுமொத்த நாடும் இதை உற்று நோக்குவதாகவும், பட்ஜெட் கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமானதாகவும் சுமூகமாகவும் நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். 60 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது முறையாக ஒரு அரசு பதவியேற்றிருப்பது பெருமையான விஷயம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். மக்களுக்கு தாம் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே முக்கிய நோக்கம் என்று கூறிய பிரதமர் மோடி, இந்த பட்ஜெட் மிகவும் முக்கியமானது என்றும், அடுத்த 5 ஆண்டுகளுக்கான இலக்குகளை முடிவு செய்யும் பட்ஜெட் இது என்றும் தெரிவித்தார். ஆகவே கட்சி வேறுபாடுகளை மறந்து நாட்டுக்காக எம்பிக்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார். இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாக கூறிய பிரதமர் மோடி, வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடையும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வளர்ச்சிக்கான பாதையில் நாடு தொடர்ந்து பயணிக்கும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.