தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள இரு ஆணையர்கள் பதவிக்கு ஞானேஷ்குமார், சுக்வீர் சிங் சாந்து தேர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள இரு தேர்தல் ஆணையர் பதவிகளுக்கு ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோரை பிரதமர் மோடி தலைமையிலான தேர்வு குழு தேர்வு செய்துள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் இணை ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஓய்வு பெற்ற நிலையில், மற்றொரு ஆணையரான அருண் கோயலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து இரு ஆணையர்களையும் தேர்வு செய்ய பிரதமர் மோடி தலைமையிலான குழு கூடியது. பிரதமரின் அதிகாரபூர்வ அரசு இல்லமான லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் நடைபெற்ற தேர்தல் ஆணையர் தேர்வு குழு ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோரது பெயர்கள் இறுதி செய்யப்பட்டதாக கூறிய எதிர்க்கட்சி தலைவரான அதிர் ரஞ்சன் சவுத்ரி இருவரின் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

சுமார் 212 அதிகாரிகளுடைய பட்டியலில் 6 பேர் கொண்ட பட்டியல் இறுதி செய்யப்பட்டு, அதிலிருந்து இருவர் புதிய தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

புதிய தேர்தல் ஆணையராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஞானேஷ்குமார் ஐ.ஏ.எஸ், 1988 ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த கேரள மாநில அதிகாரி ஆவார். 2024 ஜனவரி 31ம் தேதி ஞானேஷ்குமார் ஐ.ஏ.எஸ். பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அவர், தற்போது தேர்தல் ஆணையர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மற்றொரு தேர்தல் ஆணையராக தேர்வாகியுள்ளசுக்பீர் சிங் சாந்து, 1998ம் ஆண்டு பிரிவை சேர்ந்த சுக்பீர் சிங் சாந்து, உத்தரகாண்ட் மாநில தலைமைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்கல்வி துறையின் கூடுதல் செயலாளராகவும் பணியாற்றிய சாந்து, ஓய்வு பெற்ற நிலையில், புதிய தேர்தல் ஆணையராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Night
Day