ஒரே பெண்ணின் புகைப்படத்தை வைத்து 100 வாக்குகள் பதிவு...

எழுத்தின் அளவு: அ+ அ-

ஹரியானாவில் உள்ள 2 கோடி வாக்காளர்களில், 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டிருப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஹரியானா வாக்காளர் பட்டியலில் பிரேசில் மாடல் அழகியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளதாக குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, தேர்தலை நேர்மையாக நடத்த தேர்தல் ஆணையம் விரும்பவில்லை என்றும் சாடியுள்ளார்.

பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜக வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளதாக ராகுல் காந்தி தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறார். கர்நாடகா, மகாராஷ்டிர மாநிலங்களை தொடர்ந்து போலி வாக்குகள் மூலம் ஹரியானா என்ற ஒரு மாநிலமே திருடப்பட்டிருப்பதாக அவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, இது தொடர்பான ஆதாரங்களை ஹெச் பைல்ஸ் என்ற பெயரில் வெளியிட்டு பேசினார். அப்போது, ஹரியானா சட்டப்பேரவை தேர்தலின்போது அனைத்து கருத்துக்கணிப்புகளும், கள நிலவரங்களும் காங்கிரஸ்தான் வெற்றிபெறும் என கூறினாலும், முறைகேடுகள் நடந்ததால் காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை என்று கூறினார்.

ஹரியானாவில் உள்ள 5 கோடி வாக்காளர்களில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன என்றும் ஹரியானாவில் பிரேசில் பெண் மாடலின் படம் பல பெயர்களில் வாக்காளர் பட்டியலில் இருந்தது என்றும் அவர் குற்றம் சாட்டினார். ஹரியானாவில் 5 லட்சத்து 21 ஆயிரத்து 619 போலியான வாக்குகள் இடம்பெற்றிருந்ததாகவும் ஒரு தொகுதியில் ஒரே புகைப்படத்தை வைத்து 100 வாக்குகள் திருடப்பட்டதாக குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, ஹரியானாவில் 8-ல் ஒரு வாக்கு போலியானது என்றும் குற்றம்சாட்டினார்.

காங்கிரஸின் வெற்றியை பாஜகவின் வெற்றியாக மாற்றும் சதி நடைபெற்று வருவதாக கூறிய அவர், வாக்கு திருட்டு மூலம் பீகாரிலும் ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சிப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். 

Night
Day