ஏர்இந்தியா ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 30 விமான பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பும் வரை விமானங்களின் சேவையை குறைக்கவும் முடிவு செய்துள்ளது.

ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸை டாடா நிறுவனம் கைப்பற்றியது முதல் பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டு வந்தது. இதில் பணி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புதிய ஒப்பந்தம், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான ஊழியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்து விமான பணியாளர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்திய நிலையில், ஒப்பந்தத்திலிருந்து டாடா நிறுவனம் பின்வாங்காமல் தன் முடிவில் நிலையாக இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று ஒரே நாளில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திடீர் உடல்நலக்குறைவு எனக் காரணம் காட்டி விடுப்பு எடுத்தனர். இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் நாடு முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதில் பெரும் அவதிக்குள்ளான சில பயணிகள் விமான நிலையங்களில் உள்ள ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து பேசிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, விமானிகளின் திடீர் விடுப்பால் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பும் வரையில் விமானங்களின் சேவையை குறைக்க முடிவு செய்துள்ளதாக கூறினார்.   

இந்நிலையில் பணிக்கு திரும்பாத 30 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. மேலும் விமான ஊழியர்களிடம் பணிக்கு திரும்புவதற்கான பேச்சு வார்த்தையில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதனிடையே, விமானிகள் வேலை நிறுத்தம் காரணமாக ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை - மும்பை, சென்னை - கொல்கத்தா இடையேயான விமான சேவை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

Night
Day