அகமதாபாத் விமான விபத்து - முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியானது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எரிபொருள் வால்வு அடைக்கப்பட்டதன் காரணமாக இரண்டு இன்ஜின்களும் திடீரென பழுதானதே அகமதாபாத் விமான விபத்திற்கு காரணம் என்று முதற்கட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த மாதம் 12ம் தேதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த ஒருவரை தவிர, விமானப் பணியாளர்கள் உள்பட 241 பேர் உயிரிழந்தனர். மேலும், மருத்துவக் கல்லூரிக் கட்டிடம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் விமானம் மோதிய போது உயிரிழந்தவர்கள் என 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த விமான விபத்து புலனாய்வுப் பணியகத்துக்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டது. அதன்படி, இந்நிலையில் விமான விபத்து தொடர்பான 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது.

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து மீட்கப்பட்ட உரையாடல்களை வைத்து விசாரணை பணியகம் அறிக்கையை தயார் செய்து வெளியிட்டுள்ளது. அதில், விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் 2 இன்ஜின்களும் திடீரென பழுதானதே விபத்திற்கு காரணம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்ஜினுக்கு செல்லும் எரிபொருள் வால்வு அடைக்கப்பட்டிருந்ததாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருப்புப் பெட்டியில் பதிவாகியிருந்த விமானிகளின் உரையாடல்களை வைத்து இந்த தகவல் தெரியவந்துள்ளது.

அதாவது, இன்ஜின்களுக்குள் எரிபொருள் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் எரிபொருள் கட்ஆஃப் சுவிட்சுகள், ஒன்றன் பின் ஒன்றாக, ஒரு நொடி இடைவெளியில் 'ரன்' நிலையில் இருந்து 'கட்ஆஃப்' நிலைக்கு மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காக்பிட் ஆடியோ ரிக்கார்டரில், "ஏன் துண்டித்தீர்கள்" என ஒரு விமானி கேட்பதும், "நான் துண்டிக்கவில்லை" என மற்றொரு விமானி பதிலளித்தும் பதிவாகி உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் இருந்து பெறப்பட்ட சிசிடிவி காட்சிகள், விமானம் புறப்பட்ட உடனேயே ஆரம்ப ஏறுதலின் போதே ஏர் டர்பைன் பயன்படுத்தப்படுவதைக் காட்டியது. விமானப் பாதையின் அருகே  பறவைகளின் நடமாட்டம் எதுவும் இல்லை என்றும் வானிலை தெளிவாக இருந்ததும் தெரியவந்துள்ளது. அனுபவமுள்ள விமானி விமானத்தை இயக்கி இருப்பதையும், அவர்கள் நல்ல ஓய்வுநிலைக்கு பிறகு விமானத்தை இயக்க வந்திருப்பதையும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் நாச வேலைக்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருளிலும் எந்தவித கலப்படமும் இன்றி தூய்மையாகவே இருந்தது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் தனது அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம் சமர்பித்த நிலையில், விமான விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஏற்பதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. முதற்கட்ட விசாரணை அறிக்கை சமர்பிக்கப்பட்ட நிலையில் முழுமையான அறிக்கை வெளியாக 6 மாத காலம் ஆகும் என விமான விபத்து புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது.

Night
Day