எழுத்தின் அளவு: அ+ அ- அ
டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 2 அடுக்குகளாக ஜிஎஸ்டி வரி வரம்பை குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைக்கு பின்பான வரி குறைப்பு செப்டம்பர் 22-ம் தேதி முதல் அமலாகும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில், அவை குறித்து டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட விவாதம் நடத்தப்பட்டு, 5, 12, 18, 28 என 4 அடுக்குகளாக வசூலிக்கப்படும். ஜி.எஸ்.டியை 5 மற்றும் 18 சதவீதம் என்ற 2 அடுக்குகளாக மட்டும் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 12% மற்றும் 28% ஜிஎஸ்டி வரி விகிதங்கள் நீக்கப்பட்டு உள்ளதாகவும், இனி 5% மற்றும் 18% என மட்டுமே ஜிஎஸ்டி வரி அடுக்குகள் இருக்கும் என தெரிவித்தார். அதேநேரத்தில் சிறப்பு ஜிஎஸ்டி வரியாக ஆடம்பர பொருட்களுக்கு 40% வரி விதிக்கப்படும் என அவர் கூறினார்.
தினசரி மக்கள் பயன்படுத்தும் ஹேர் ஆயில், ஷாம்பு, டூத் பேஸ்ட், சோப்பு, ஷேவிங் கிரீம் உள்ளிட்டவற்றுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி மட்டுமே வசூலிக்கப்படும் என்றும், ஏசி, டிவி, கார் உள்ளிட்டவற்றுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தனிநபர் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ், உயிர் காக்கும் மருந்துகளுக்கு இனி ஜிஎஸ்டி வரி இல்லை என்றும், அதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆட்டோமொபைல் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18% குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைக்கு பின்பான வரி குறைப்பு செப்டம்பர் 22-ம் தேதி முதல் அமலாகும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.