மத்திய துருக்கியில் இரண்டாது முறையாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுக்கோலில் 7.6 ஆக பதிவு - கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து ஓட்டம்
Feb 6 2023 6:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
துருக்கியில் 12 மணிநேர இடைவெளியில் இரண்டாவது சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அடுத்தடுத்து தாக்கியதால் அந்நாட்டு மக்கள் நிலைகுலைந்து போயுள்ளனர். இந்த நிலநடுக்க பாதிப்பில் ஏற்கெனவே ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
துருக்கி நாட்டின் தென்பகுதியில் உள்ள Gaziantep நகருக்கு அருகே இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்க பாதிப்பு சிரியாவின் வடபகுதிகள் வரை நீண்ட நிலையில், துருக்கியில் மட்டும் 912 பேர் உயிரிழந்தனர். இதே போல் சிரியாவில் 370 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கித் தவிப்போரை மீட்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து,
இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் மீட்புப்பணியில் உதவிக்கரம் நீட்டியுள்ளன.
நிலநடுக்கம் ஏற்பட்ட Gaziantep பகுதியிலிருந்து சுமார் 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்பிஸ்டான் பகுதியில் இன்று மாலை மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.5ஆகப் பதிவான இந்த நிலநடுக்கமும் துருக்கி மற்றும் சிரியாவில் கடும் பாதிப்புக்களை ஏற்படுத்தின.
பல லட்சக்கணக்கான பொதுமக்கள் நில அதிர்வை உணர்ந்ததாகத் தெரிவித்துள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் கடும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். இரண்டு நிலநடுக்கங்களையும் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும், இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடுபவர்களைக் மீட்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் துருக்கி அதிபர் எர்துவான் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்க பாதிப்பில் ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளும் உதவிகளை அளிக்கத் முன்வந்துள்ளன.