மேலவளவு பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் - தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
Nov 20 2019 5:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டம் மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 13 பேர் விடுதலை செய்யப்பட்டது குறித்து, தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த மேலவளவு பஞ்சாயத்து தனி தொகுதியில் போட்டியிட்டு தலித் சமுதாயத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் வெற்றி பெற்றார். தங்களின் எதிர்ப்பையும் மீறி போட்டியிட்டு வெற்றி பெற்றதால் ஆத்திரம் அடைந்த மற்றொரு சமூகத்தினர் பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உட்பட 7 பேரை கடந்த 1997-ஆம் ஆண்டு ஓட, ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தனர். தமிழகத்தையே உலுக்கிய இவ்வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டிலும் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 13 பேரை, நன்னடத்தை அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்தது. இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் ஆவணங்களை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தனர். இந்த அரசாணைக்கு எதிராக உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. வழக்கு விசாரணை இன்று மீண்டும் வந்தபோது, நீதிபதிகள் திரு. வைத்தியநாதன், திரு. ஆனந்த், திரு. வெங்கடேஷ் ஆகியோர் அமர்வு, எதன் அடிப்படையில் 13 பேரையும் விடுதலை செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டது என தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.