கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடரும் கனமழை : சாலைகளில் பெருக்கெடுத்தும் ஓடும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Oct 4 2023 3:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டத்தில் 6-வது நாளாக பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 6-நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குதொடர்ச்சி மலையோர பகுதிகளான கோதையாறு, குற்றியாறு, மோதிரமலை, தச்சமலை, முடவன்பொற்றை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை நீடித்து வருகிறது. கனமழையால் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை பெருஞ்சாணி சிற்றார் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணபடுகிறது. இதனால், மாவட்டத்திலுள்ள முக்கிய ஆறுகளான பரளியாறு, கோதையாறு, தாமிரபரணி, ஆறுகளிலும் கடும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழையால் குளங்கள், கால்வாய்கள் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் சுற்றுலாதலமான திற்பரப்பு அருவியில் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக ஆற்றை ஒட்டியுள்ள விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் பேச்சிப்பாறை பொன்னியாகுளம் பகுதியில் வாழைதோட்டங்கள் தண்ணீரில் மிதந்தன. இதேபோல் பொன்னியாகுளம் ஊருக்கு செல்லும் பாதையும் தண்ணீரில் மூழ்கியது. திக்குறிச்சி பகுதியில் ரப்பர் தோட்டத்திலும் தண்ணீர் தேங்கியதால் தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாமல் வருமானத்தை இழக்கும் நிலை ஏற்பட்டது. தொடர்மழை காரணமாக கன்னியாகுமரியில் 2-வது நாளாக இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.