தமிழ்நாடு முழுவதும் அண்மையில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில், 28 மாத கால திமுக ஆட்சியின் அவலங்ளை தமிழக மக்கள் வெளிக்கொண்டு வந்துள்ளதாகவும், குடிநீர் வசதி, சாலை வசதி, கழிப்பறை, தெரு விளக்கு உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் திமுக அரசு செய்து தரவில்லை என தமிழக மக்கள் கிராமசபை கூட்டங்களில் குற்றம் சாட்டி தங்களின் வேதனைகளை எல்லாம் தெரிவித்திருக்கிறார்கள் என்றும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். திமுகவினர் இதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் தேர்தலை மட்டுமே குறிவைத்து செயல்பட்டுக் கொண்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் அண்மையில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில், திமுக தலைமையிலான 28 மாத கால ஆட்சியின் அவலங்களை தமிழக மக்கள் வெளிக்கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். திமுக தலைமையிலான அரசு, குடிநீர் வசதி, சாலை வசதி, கழிப்பறை, தெருவிளக்கு போன்ற எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என, தமிழகமக்கள் கிராமசபை கூட்டங்களில் குற்றம் சாட்டி தங்களுடைய வேதனைகளையெல்லாம் தெரிவித்து இருக்கிறார்கள் - இதனைக்கண்டு பொறுத்துக்கொள்ளமுடியாத ஒரு சில ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆளும் வர்க்கத்தினரின் ஆசிர்வாதத்தோடு, கேள்வி கேட்ட விவசாயிகளையும், பொதுமக்களையும் காலால் உதைப்பது, அடிப்பது, அநாகரிகமாக நடந்து கொண்டதையும் தொலைக்காட்சி மற்றும் ஊடகங்கள் வாயிலாக காணமுடிந்தது - திமுக தலைமையிலான விளம்பர அரசு, வாக்களித்த மக்களின் கோரிக்கைகளுக்கு கொஞ்சமாவது செவி சாய்த்து அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளையும், அடிப்படை தேவைகளையும் உடனே பூர்த்தி செய்திட வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளையார்குளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயி அம்மையப்பன் என்பவர், கிராம சபை கூட்டத்தை ஒரே இடத்தில் நடத்தாமல் வெவ்வேறு கிராமங்களில் நடத்த வேண்டும் - மேலும், ஊராட்சி செயலாளர்களை மாற்றம் செய்ய வேண்டும் என்ற கருத்தை கூறியதற்காக, ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் எழுந்து வந்து விவசாயி அம்மையப்பனை காலால் எட்டி உதைத்து தாக்கியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது - மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்ட ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பெருமத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு வந்திருந்த பெருமத்தூர், குடிக்காடு, நல்லூர், மிளகாய்நத்தம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் குடிநீர், தெருவிளக்கு, சாக்கடைகால்வாய், கழிப்பறை, சாலை உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என குற்றம் சாட்டி, கூட்டத்தைப் புறக்கணித்ததோடு, கூட்டம் நடைபெற்ற பள்ளியில் ஊராட்சி மன்ற பிரதிநிதிகளை உள்ளே வைத்து பொதுமக்கள் கேட்டை இழுத்து பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என புரட்சித்தாய் சின்னம்மா சுட்டிக்காட்டியுள்ளார்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மிராளூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், தங்கள் ஊரில் மயான வசதி, சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் ஏதாவது கேட்கச் சென்றால் ஊராட்சி மன்ற தலைவரும் அவரது கணவரும் ஒருமையில் பேசுவதாகவும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணி புரிவதற்கு அடையாள அட்டை வழங்க நபர் ஒருவரிடம் 500 ரூபாய் கேட்பதாகவும் ஊராட்சி மன்ற தலைவர் மீது அப்பகுதி மக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சொல்கிறார்கள் என கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கென்டரச்சேரி ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் பொது நிதியை முறைகேடு செய்துள்ளதாக பலமுறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், மின் விளக்கு இன்றி கிராமமே இருளில் மூழ்கி உள்ளதாகவும், கிராம சபை கூட்டத்தை நடத்திய ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வாக்குவாதம் செய்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கல்குறிச்சி ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவராக யாஸ்மின் சஞ்சய்பாபு என்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் பதவி வகித்து வரும் நிலையில், பதவி ஏற்ற இரண்டு வருடங்களில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு ஒன்றரை கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாகவும், குடிநீர் பிரச்சனையை கண்டு கொள்ளாததைக் கண்டித்தும், ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலரை கிராமமக்கள் முற்றுகையிட்டதால் கிராம சபை கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில், தகட்டூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், மானாவாரி விவசாயத்தை பாதுகாக்க சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டு, முடங்கும் நிலையில் உள்ள தகட்டூர் மின் இறவை பாசனத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றும், வடிகால் வாய்க்கால்களை தூர் வார வலியுறுத்தியும் கருப்பு பேட்ஜ் அணிந்து கிராமமக்கள் மற்றும் விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வடசிறுவள்ளூர் கிராமத்தில் திமுக ஊராட்சி மன்ற தலைவராக சத்தியபாமா சம்பத் செயல்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பணி செய்யும் பணிதள பொறுப்பாளர்களை மாற்றக் கோரியும், 100 நாள் வேலை அடையாள அட்டை வழங்க கோரியும் ஊராட்சி மன்ற தலைவரையும், கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகளையும் பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சேத்திர பாலபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அரையபுறத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற ஏராளமான பெண்கள், தகுதி வாய்ந்த நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்றும், தகுதி இல்லாத பல பேர் இந்த உரிமை தொகையை பெற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டி, இதுகுறித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை, திமுகவினர் ஏற்க மறுத்ததால் திமுகவினரை சுற்றி வளைத்து பெண்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் வளையமாதேவி மற்றும் கத்தாழை கிராமத்தில் பல நாட்களுக்குப் பிறகு என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக தொடர்ந்து விவசாய நிலங்களை, என்எல்சி அதிகாரிகள், ஜேசிபி எந்திரங்கள் மூலம் சமன் செய்து வருவதாகவும், என்எல்சி நிர்வாகம் கைப்பற்றிய இடங்களுக்கு இன்னமும் முழுமையான இழப்பீடு தரவில்லை எனவும், வீட்டில் ஒருவருக்கு நிரந்தர வேலை தரவில்லை என்றும், தற்போது இந்த பகுதியிலேயே என்எல்சி நிர்வாகத்தால் கைப்பற்றப்பட்ட இடங்கள் இன்னும் 100 ஏக்கருக்கு மேல் இருப்பதாகவும், அதற்கு எந்தவிதமான நிவாரணமும் இன்னும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்து, என்எல்சி நிர்வாகத்தின் மக்கள் விரோத போக்கை கண்டிக்கும் வகையில் கத்தாழை கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்துள்ளனர் என கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.
ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூரில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் பொது மக்களுக்கு இடையூறாக உள்ள கல்குவாரிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சொக்கநாதன்புத்தூர் மற்றும் மேலூர் துரைச்சாமிபுரம் பகுதிகளில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்றும், அப்பகுதியில் உள்ள பெண்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என அஇஅதிமுகபொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சுட்டிக்காட்டியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சென்னசமுத்திரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தி.மு.கவினருக்கிடையே ஏற்பட்ட முன் விரோத தகராறில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை முன்னாள் தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் தாக்கியதால் கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மட்டியாரேந்தல் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய வறட்சி நிவாரண இன்சூரன்ஸ் தொகையானது, கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகாரிகளின் அலட்சியத்தாலும், ஒருதலைப்பட்சமாகவும் விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் வரவு வைக்கப்படாததால், ஆத்திரமடைந்த அப்பகுதி விவசாயிகள் கிராம சபை கூட்டத்தில் புகார் தெரிவித்த பின்னர் கூட்டத்தை புறக்கணித்து, மானாவாரி நெல் சாகுபடி செய்த வயலில் இறங்கி, மண்ணை வாரி தூற்றி, அதிகாரிகளுக்கு சாபம் விடுத்து, விவசாயிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது இன்றைய முதல்வர், தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கிராம மக்களின் குறைகளைக் கேட்பதாக சொல்லி 'மக்கள் கிராம சபை' என்ற பெயரில் கூட்டங்களை நடத்தி, ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்களை வாக்குறுதிகளாக அளித்து, மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வந்து,தற்போது 28 மாதங்கள் கடந்த நிலையில் மக்களுக்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை - மாறாக திமுக தலைமையிலான அரசு சொத்துவரியை உயர்த்தியும், ஆவின் பால் பொருட்களின் விலையை உயர்த்தியும், மின் கட்டணத்தை உயர்த்தி, சிறு குறு நிறுவனங்களை மூடச் செய்தும், முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தியும், நிலம் மற்றும் வீட்டு மனைகளின் வழிகாட்டி மதிப்பை உயர்த்தியும் தமிழக மக்களை அன்றாடம் கசக்கிப் பிழிந்து கொண்டு இருக்கிறது - மேலும், பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டு வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருக்கும் ஏழை, எளிய, சாமானிய பெண்கள் மத்தியில் யார் தகுதி வாய்ந்த பெண்கள்? என்று திமுகவினர் இன்றைக்கு புதிதாக ஒரு பிரச்னையை ஏற்படுத்தி, தமிழக பெண்களை திண்டாட வைத்தது தான் மிச்சம் - இதற்கெல்லாம் தமிழக மக்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலேயே திமுகவினருக்கு தக்க பாடம் புகட்டப் போகிறார்கள் என்பதை மட்டும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்வதாக, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தமிழகம் முழுவதும் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் மக்களின் கோரிக்கைகளில் ஒரு சிலவற்றை மட்டும் தான் இந்த அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும், ஆனால், தமிழகம் முழுவதும் மக்களுக்கு நிறைவேற்றப்படாத எண்ணற்ற அடிப்படை வசதிகள் ஒவ்வொரு பகுதியிலும் நிறைவேற்றப்படாமல் இருப்பதை திமுகவினர் எண்ணிப் பார்க்கவேண்டு என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார் - ஆனால் திமுகவினர் இதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் தேர்தலை மட்டும் குறிவைத்து செயல்பட்டுக் கொண்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது - எனவே, தமிழகம் முழுவதும் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் மக்களின் இன்றியமையாத தேவைகளை பூர்த்திசெய்வதற்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும், திமுக தலைமையிலான அரசு கவனத்தில் எடுத்து கொண்டு, வாக்களித்த மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிட தேவையான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.