ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மலர் சந்தைகளில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
நெல்லை பூ சந்தையில், மல்லிகை பூ ஒரு கிலோ ஆயிரத்து 200 ரூபாய்க்கும், பிச்சிப்பூ ஒரு கிலோ ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஒரு கிலோ ரோஜாப்பூ 250 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
நாளை ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில், கும்பகோணம் நகரிலும் இன்று பூக்களின் விலை அதிகமாக இருந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஒருகிலோ 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட செண்டிப்பூ, 90 ரூபாய்க்கும், 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட செவ்வந்தி பூ, கிலோ 300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில், கதம்பமாலை கட்டுவதற்கு பயன்படும் பூக்களை வாங்குவதற்கு வியாபாரிகள் அதிக ஆர்வம் காட்டியதால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் அரளிப்பூ, செண்டுமல்லி, செவ்வந்தி பூ, வாடாமல்லி, கோழிக்கொண்டை ஆகிய பூக்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது.
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் பண்டிகைகளால் திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூக்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப்பூ, 800 ருபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் முல்லைப்பூ 800 ரூபாய்க்கும், சம்பங்கி 350 ரூபாய்க்கும், செவ்வந்தி 400 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நாளை ஆயுத பூஜை கொண்டாடப்படும் நிலையில் ஈரோட்டில் செவ்வந்தி பூமாலை கட்டும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஓசூர், பெங்களூரு, ராயக்கோட்டை, மாரணல்லி உள்ளிட்ட பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட பூக்களை மாலையாக கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆயுத பூஜையை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அயர்மலை பகுதியில் தனியார் மண்டபம் பிடித்து குவியல் குவியலாக பூக்களை கொட்டி, பூ மற்றும் மாலை கட்டும் பணியை நடைபெற்று வருகிறது. இங்கு ஒரு கிலோ மல்லிகை ஆயிரம் ரூபாய்க்கும், செவ்வந்தி 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆயுத பூஜையையொட்டி ஆத்தூர் அருகே உள்ள விவசாயத் தோட்டத்தில் பூக்கள் அறுவடை செய்யும் பணி தீவிரமா நடைபெற்று வருகிறது. இங்கு அறுவடை செய்யும் பூக்கள், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளின் மலர் சந்தைகளுக்கு எடுத்துசெல்லப்படுகிறது. ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜைக்காக பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.