தாராபுரம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிய நெல் மூட்டைகள் மழையால் சேதம் - நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை
May 13 2022 4:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 8 ஆயிரத்து 500 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்திருப்பதால், மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாராபுரத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 22,000 ஹெக்டேரில் நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. இதற்காக தாராபுரத்தில் 7 இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
அறுவடை செய்த நெல்லை விவசாயிகள்ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யவேண்டும் என அரசு அறிவித்துள்ளதால், விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைகளை அடுக்கி வைத்து காத்திருக்கின்றனா். இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடா் மழையால் அலங்கியம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 8 ஆயிரம் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.
திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அரசு போதிய அளவில் தார்ப்பாய் வழங்கவில்லை எனவும் மேலும் கடந்த 15 நாட்களுக்கு மேலாக விவசாயிகளிடம் இருந்து வாங்கப்பட்ட நெல் மூட்டைகளை ஏற்றுவதற்காக லாரிகள் வரவில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதன் காரணமாக, சுமார் 8 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, நெல் அனைத்தும் முளைத்துவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இப்பிரச்னையில், மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.