ஆசிய போட்டிகளில் 73 பதக்கங்களை கைப்பற்றி இந்தியா அசத்தல் : அதிக பதக்கங்களை குவித்து இந்தியா புதிய வரலாறு
Oct 4 2023 2:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
19வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த 23ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வரும் 8ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டிகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், 11வது நாளான இன்று நடைபெற்ற வில்வித்தை போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜோதி வென்னம், ஓஜஸ் தியோடலே இணை, 159க்கு 158 என்ற புள்ளி கணக்கில் கொரிய ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று அசத்தினர்.
இதேபோல், 35 மீட்டர் கலப்பு நடைப்பயண போட்டியில் இந்தியாவின் மஞ்சு ராணி மற்றும் ராம் பாபூ ஆகியோர் 5 மணிநேரம் 51 நிமிடம் 14 வினாடிகளில் இலக்கை அடைந்து வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.
இதேபோல், ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அனாஹத் சிங், அபய் சிங் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
57 கிலோ மகளிர் குத்துச்சண்டை அரையிறுதி போட்டியில் சீன தைபே வீராங்கனையிடம் 5-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய வீராங்கனை பர்வீன் ஹூடா வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதனிடையே, ஆசிய போட்டிகளில் இந்தியா 73 பதக்கங்கள் வென்றுள்ளது இதுவே அதிகப்பட்ச பதக்கங்களாகும். கடந்த 2018ம் ஆண்டு இந்தியா 70 பதக்கங்கள் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம், 16 தங்கம், 26 வெள்ளி, 31 வெண்கலம் என 73 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் நீடிக்கிறது. 164 தங்கம், 90 வெள்ளி, 46 வெண்கலம் என 300 பதக்கங்களுடன் சீனா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 33 தங்கம், 48 வெள்ளி, 50 வெண்கலம் என 131 பதக்கங்களுடன் ஜப்பான் 2வது இடத்திலும், 32 தங்கம், 44 வெள்ளி, 65 வெண்கலம் என 141 பதக்கங்களுடன் கொரியா 3வது இடத்திலும் உள்ளது. 14 தங்கம், 15 வெள்ளி, 21 வெண்கலம் என 50 பதக்கங்களுடன் உஸ்பெகிஸ்தான் 5வது இடத்தை பிடித்துள்ளது.