திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மசூதியில் பெண்கள் தலையில் தீ கங்குகளை கொட்டியும், ஆண்கள் பூக்குழி இறங்கியும் நூதன நேர்த்திக்கடன்
Nov 7 2014 10:14AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில் உள்ள மசூதி ஒன்றில் இன்று அதிகாலை நூதனமான முறையில் மும்மத நேர்த்திக்கடன் நடைபெற்றது. அப்போது, பெண்கள் தலையில் தீ கங்குகளை கொட்டியும், ஆண்கள் பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடனை செலுத்திய காட்சி மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது.
சாணார்பட்டியில் உள்ள எமக்கலாபுரத்தில் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த அல்லா மசூதி அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மொஹரம் பண்டிகையை ஒட்டி, 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஜாதி, மத, பேதமின்றி ஒன்றிணைந்து மும்மத வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி, இன்று அதிகாலை 3 மணிக்கு நடைபெற்ற இந்த வழிபாட்டினையொட்டி, பச்சை மரங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து, பக்தர்கள் பூக்குழி இறங்குவதற்கு உத்தரவு கேட்கும் வகையில் தீக்குண்டத்தில் மயில்தோகை போடப்பட்டது. இது எரியாமல் இருந்தால் மட்டுமே தீக்குண்டத்தில் இறங்க வேண்டும் என்பது ஐதீகம். அதன்படி, 10 முறைக்கு மேல் மயில்தோகை தீயில் போடப்பட்ட பின்னரே, பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்குவதற்கான ஆண்டவனின் உத்தரவு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து, தீ கங்குகளை பெண்கள் தலையில் கொட்டியும், மும்மதங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நிகழ்ச்சியின் நிறைவாக, பூ பல்லக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அல்லா மசூதியை வந்தடைந்தது.