குஜராத் முதற்கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் : பகல் 1 மணி நிலவரப்படி 34 சதவீத வாக்குகள் பதிவு
Dec 1 2022 2:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. பகல் 1 மணி நிலவரப்படி, 34.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில், 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, முதல்கட்டமாக தெற்கு குஜராத் மற்றும் கட்ச்-சௌராஷ்டிரா பகுதியில் உள்ள 89 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 718 ஆண் வேட்பாளர்கள், 70 பெண் வேட்பாளர்கள் என மொத்தம் 788 வேட்பாளர்கள் இன்றைய தேர்தல் களத்தில் போட்டியில் உள்ளனர். முதல் முறை வாக்காளர்கள் உள்பட சுமார் 2 கோடியே 39 லட்சம் பேர் இன்றைய தேர்தலில் வாக்களிக்கின்றனர். வாக்குப் பதிவிற்காக, 25,434 வாக்கு சாவடி மையங்களில், 34,324 மின்னணு இயந்திரங்களும், 38,749 வாக்கு ஒப்புகை சீட்டு இயந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளன.
இதுவரை காங்கிரஸ், பா.ஜ.க. என இரு முனைப்போட்டி என்றிருந்த குஜராத்தில் இந்த முறை ஆம் ஆத்மியால் மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது. மொத்தம் 39 அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் உள்ளன.
இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் 89 தொகுதிகளில் மணிநகர், மோர்பி, கோத்ரா உள்ளிட்ட 25 தொகுதிகள் விஐபி தொகுதிகளாகக் கருதப்படுகின்றன. கம்பாலி தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் இசுதன் காத்வி, குஜராத் முன்னாள் அமைச்சர் பர்ஷோத்தம் சோலங்கி, 6 முறை எம்எல்ஏவாக இருந்த குன்வர்ஜி பவாலியா, மோர்பி பால விபத்தின்போது முழங்கால் அளவு நீரில் நீந்தி கிண்டலுக்கு ஆளான பா.ஜ.க.வின் காந்திலால் அம்ருதியா, கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா, குஜராத் ஆம் ஆத்மி தலைவர் கோபால் இத்தாலியா ஆகியோர் இன்றைய தேர்தலில் குறிப்பிடத்தக்கவர்கள்.