மஹாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் 100-க்கும் மேற்பட்ட முகாம்கள் மூடல் - சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப் பேட்டி
Apr 8 2021 3:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹாராஷ்டிர மாநிலத்தில், கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக, 100-க்கும் மேற்பட்ட தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திரு. ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே, கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில், மஹாராஷ்டிர மாநிலம் தொடர்ந்து முதலிடத்திலுள்ளது. இங்கு, கொரோனா தொற்றின் இரண்டாவது அலை கோரத் தாண்டவமாடி வருகிறது. தினசரி சுமார் 60 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டும் வரும் நிலையில், இரவு நேர ஊரடங்கு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தடுப்பூசி கையிருப்பு குறித்து பேட்டியளித்த, மஹாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சர் திரு. ராஜேஷ் தோப், மாநிலத்தில், அடுத்த 3 நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும், பற்றாக்குறையால் தடுப்பூசி முகாம்கள் மூடப்பட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்தார். தடுப்பூசி பற்றாக்குறை குறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடம் தெரிவித்துள்ளதாகவும், பற்றாக்குறையால், மும்பையில் 26 முகாம்களும், புனேவில், 100 முகாம்களும் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.