நியாயமான கோரிக்கைகளுக்காக டெல்லியை நோக்கி செல்லும் விவசாயிகளை தடுத்து நிறுத்துவதா? - ஹரியானா அரசுக்கு பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் கண்டனம்
Nov 27 2020 10:24AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியை நோக்கி பேரணி சென்ற பஞ்சாப் விவசாயிகளை தடுத்து நிறுத்திய ஹரியானா அரசுக்கு பஞ்சாப் முதலமைச்சர் திரு. அமரிந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி நோக்கி செல்லும் பஞ்சாப் விவசாயிகளின் பேரணி, தங்கள் மாநிலத்துக்குள் நுழைய, ஹரியானாவை ஆளும் பாரதிய ஜனதா அரசு தடை விதித்தது. நேற்று முன்தினமே தனது மாநில எல்லைகளை மூடி சீல் வைத்தது. எனினும் பஞ்சாப் விவசாயிகளின் பேரணி நேற்று இரு மாநில எல்லையான சாம்புவை அடைந்தது. அங்கு பெருமளவில் குவிக்கப்பட்டிருந்த ஹரியானா போலீசார், பஞ்சாப் விவசாயிகளை உள்ளே விட மறுத்தனர். தடுப்பு வேலிகளை வைத்து சாலைகளை அடைத்தனர். பேரணியை கலைக்க தடி அடியும் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இருந்தபோதிலும், விவசாயிகளை விரட்டியடிக்க முயன்ற போலீசாரின் முயற்சி தோல்வி அடைந்தது. 2 மணி நேர போராட்டத்துக்குப்பின் விவசாயிகள் ஹரியானா எல்லைக்குள் புகுந்து, டெல்லி நோக்கிய பேரணியை தொடர்ந்தனர்.
இந்நிலையில் தங்கள் மாநில விவசாயிகளை ஹரியானா எல்லையில் தடுத்து நிறுத்திய அம்மாநில பா.ஜ.க. அரசுக்கும், முதலமைச்சர் திரு. மனோகர்லால் கட்டாருக்கும் பஞ்சாப் முதலமைச்சர் திரு. அமரிந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைதியான முறையில் போராட்டம் நடத்திவரும் பஞ்சாப் விவசாயிகள் மீது ஹரியானா அரசு படைகளை ஏவி ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட்டது ஏன்? பொது நெடுஞ்சாலையை அமைதியாக கடந்து செல்ல விவசாயிகளுக்கு உரிமை இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார். ஹரியானா அரசின் செயல், ஜனநாயக விரோதமானது என்றும், அரசியல் சட்டத்துக்கு எதிரானதும் என்றும் திரு. அமரிந்தர் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.