பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு - செங்கல்பட்டு மாணவி தோஷிதா முதலிடம்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் பி.இ., பி.டெக். உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியானது. இதில், செங்கல்பட்டை சேர்ந்த தோஷிதா என்ற மாணவி முதலிடத்தை பிடித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ளன. இதில் சேர்வதற்காக 2 லட்சத்து 53 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 853 பேர் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி, தேவையான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்தனர். இவர்களுக்கு கடந்த 12ம் தேதி ரேண்டம் நம்பர் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 13ம் தேதி முதல் 30ம் தேதி வரை சான்றிதழ்கள் சார்பார்க்கப்பட்டன. இந்நிலையில், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கனவே அறிவித்தபடி, இன்று பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

இதில், செங்கல்பட்டை சேர்ந்த தோஷிதா என்ற மாணவி முதலிடத்தையும், நெல்லையை சேர்ந்த மாணவி நிலஞ்சனா 2வது இடத்தையும், நாமக்கல்லை சேர்ந்த மாணவர் கோகுல் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். 

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7 புள்ளி 5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேலம் மாவட்ட மாணவி ரவணி முதலிடத்தை பிடித்துள்ளார். பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 22ம் தேதி முதல் செப்டம்பர் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. வரும் 22 மற்றும் 23ம் தேதிகளில் 7 புள்ளி 5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு பிரிவினருக்கும், வரும் 29ம் தேதி முதல் செப்டம்பர் 3ம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. 

Night
Day